சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகம் தரும் வகையில், கேது பகவான் ஆறாம் இடத்தில் இருக்கும் நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. ஆன்மிகப் பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். புகழ் பெற்ற கோயில்களுக்குப் போய் வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகங்கள் மற்றும் விழாக்கள், விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
விளம்பி வருட சிம்மம் ராசிபலன்
பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவானுடைய சஞ்சாரம் இந்த ஆண்டு சரியாக இல்லை. இதனால், சின்னச் சின்ன செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், பேச்சில் நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள்.
கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். ‘சில பேர் உடனே தருகிறேன்’ என உங்களிடம் கடன் வாங்குவார்கள். அதன் பிறகு, உங்களைத் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.பணத்தையும் திருப்பித் தர மாட்டார்கள். அதனால், பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
உங்களுக்கு இன்னொரு யோகாதிபதியாக இருப்பவர் செவ்வாய், 30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் உச்சம் பெற்று 6 – ல் அமர்வதால், வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர்களுடனான பாகப்பிரிவினை போன்ற விஷயங்கள் சுமுகமாக முடியும். சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். செவ்வாயால் உங்களுக்கு இந்த ஆண்டு அமோகமாக இருக்கும்.
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், வேலைகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். சில வேலைகளை இரண்டு மூன்று முறைகூட செய்யவேண்டியிருக்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். இந்த வருஷம் முழுவதுமே ராகு, கேது சாதகமாக இருப்பதால், சிலருக்கு வெளிநாடு, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் களால் யோகம் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 3 -ம் இடத்தில் சுக்கிரன் ஆகஸ்டிலிருந்து டிசம்பர் வரை இருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெற்றோர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இல்லாமல் போகும். குடும்பத்தில் மன நிம்மதியும் ஒற்றுமையும் ஏற்படும்.
வியாபாரத்தில் இதுவரை இருந்த தேக்கநிலை மாறி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வியாபரத்தில் புதிதாக முதலீடு செய்வது, புதிதாகத் தொழில் தொடங்குவது போன்றவற்றில் ஈடுபடலாம். புதிய பங்குதாரர்கள், புதிய பணியாளர்களைச் சேர்த்து உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இந்த வருடம் சிறப்பாக இருக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மற்றவர்களுக்குக் கிடைக்காத சில சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
மாணவர்களுக்கு இந்த ஆண்டு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் அமோகமாக இருக்கும். நீர் வளமும் பெருகும். விளைச்சலை விற்பனை செய்யும்போது நல்ல லாபம் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளில் வாங்கி இருந்த கடனை அடைப்பீர்கள்.
கலைத்துறையினரின் படைப்பாற்றல் சிறந்த முறையில் வெளிப்படும். இதனால் அவர்களுக்குப் பட வாய்ப்புகள் பெருகுவதுடன் வருமானமும் அதிகரிக்கும்.
மொத்தத்தில், இந்தப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையும்.
பரிகாரம்
அரியலூர் மாவட்டம், காமரசவல்லி எனும் ஊரில் அருளும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால், எல்லா வகையிலும் நன்மை தரும்.