தற்போது இலங்கை அரசியல் பல்வேறுபட்ட குழப்ப நிலைகளோடு பரபரப்படைந்துள்ள நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாசவிடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போதே பிரதமர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தல் காலகட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பொறுப்பினை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் எனவும் பிரதமர் ஆலாசனை முன்வைத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ரணில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என அக்கட்சிக்குள்ளேயே முரண்பாடுகளும், அழுத்தங்களும் ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே ரணில் குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவதோடு உபதலைவராக நவின் திஸாநாயக்க நியமிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு கட்சி முக்கியஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், சஜித் பிரேமதாச குறித்த கோரிக்கையினை நிராகரித்துள்ளதோடு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கும் தனது அதிருப்தியினை இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பின்வாங்குவார் என்றால் கட்சியின் தலைமைப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தான் தயார் என அமைச்சர் தயா கமகே தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
எனினும் குறித்த யோசனைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுவதோடு, கட்சியின் தலைமைத்தும் தொடர்பாக ஐ.தே.க மட்டத்தில் தொடர்ந்தும் ஆலாசனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment