நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் கூடப் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரிய வந்தது.
மானிப்பாயிலுள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதும், காயமடைந்த மற்றையவர் பின்னாலிருந்து சென்றதும் தெரிய வந்தது. விபத்தின் போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரிய வந்தது.
உயிரிழந்த மாணவன் அதிகாலை 2.58 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதிகாலை 4 மணியளவில் உடுப்பிட்டியில் தாக்குதல் நடந்தது.
இது குறித்து பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் உள்ள உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, ஹைஏஸ் வாகனத்துக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் நண்பனும் இணைந்து இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது விபத்து நிகழ்ந்தது.
கொழும்பு- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் ஒருவரின் வீடு புகுந்து வீட்டு யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், ஹைஏஸ் வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளனர். எனினும், வீட்டிலிருந்தவர்கள் எச்சரிக்கையடைந்ததும், அவர்கள் தப்பியோடி விட்டனர்.
அங்கிருந்து வேகமாக தப்பிச் செல்லும் போதே நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்தார். அவரது வயிற்றின் கீழ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பல்சர் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி பகுதி தாக்கியதால் அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்தை தொடர்ந்து, நண்பர்களுக்கு அறிவித்து, சம்பவத்தை மறைக்க அந்த இடத்தை சுத்தம் செய்து, தடயங்களை மறைத்ததுடன், காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியுள்ளனர்.
அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு எடுத்து சென்று மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
விபத்தில் உயிர்தப்பி சிகிச்சை பெறும் இளைஞன் அடிக்கடி வெவ்வேறு தகவல்களை வழங்கியது தெரிய வந்துள்ளது. ஒரு தலை காதல் விவகாரத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்தவரே குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அதற்கு வாய்ப்பில்லையென்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான வீட்டு உரிமையாளர், யாழ்ப்பாணம்- கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளார். வீட்டு உரிமையாளர் கிளிநொச்சியில் காணியொன்று கொள்வனவு செய்த போது, வெளிநாட்டிலுள்ள ஒருவருடன் தகராறு எழுந்தது. காணி உரிமையாளரின் உறவினரான வெளிநாட்டு வாசி, உடுப்பிட்டியிலுள்ளவருக்கு தெலைபேசியில் கொலை மிரட்டல்களும் விடுத்திருந்தார். இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் கொழும்பில் பொலிஸ் முறைப்பாடும் செய்திருந்தார்.
இந்த பின்னணியிலேயே, அவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது.
காயமடைந்து சிகிச்சை பெறுபவர் கூறிய தகவலின்படி, ஒரு தலை காதல் விவகாரத்துக்கான எந்த சூழலும் இல்லையென கருதப்படுவதால், வெளிநாட்டிலுள்ள ஒருவரால் கூலிப்படையாக அனுப்பப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment