வட மாகாண தமிழ் தினப்போட்டியில் தமது விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகளை மாற்றி வெளியிட்டு வருவதாக வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக வட மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வட மாகாண தமிழ் தினப்போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் நிலையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர்.
இந் நிலையில் 2018ம் ஆண்டுக்கான மாகாண தமிழ் தினப்போட்டிகள் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது போட்டிகளின் முடிவுகள் போட்டி இடம்பெற்று சிறிது நேரத்தில் விளம்பரப்பலகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மீண்டும் சில நாட்களின் பின்னர் முடிவுகள் மாற்றப்பட்டு வேறு பாடசாலைகளுக்கு முதலாமிடம் வழங்கப்பட்டுள்ளது.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என அறிவிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த முடிவுகளை மாற்றும் பின்புல சக்தி தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகின்றது. இவ்வாறு முடிவுகளை மாற்றும்போது காரணங்களை கூறாமல் செயற்படுவதானது மாணவர்களின் மன நிலையில் தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன் பக்கச்சார்பான செயற்பாட்டினையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் நாட்டார் பாடல் நிகழ்ச்சியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் போட்டியில் பங்குபற்றி அதிக புள்ளிகளை பெற்று முதலாமிடம் பெற்றதாக போட்டி இடம்பெற்ற அன்று மாகாண கல்விப்பணிப்பாளர் கையொப்பம் இட்டு முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் மாகாண கல்விப்பணிப்பாளரையும் மீறி பக்கச்சார்பான முறையில் முடிவு மாற்றப்பட்டு 04.06.2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முதல் மூன்று இடங்களுக்குள்ளும் இடம்பெறாத முடிவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி முதலாமிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு முடிவை மாற்றியமை யார் என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ள நிலையில் தமிழ் தினப்போட்டியின் நம்பகத்தன்மை மற்றும் நடுவர்களின் தகுதி என்பன ஆராயப்படவேண்டிய விடயமாகியுள்ளது.
எனவே இது தொடர்பாக கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கப்போகின்றார் என்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.