தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் எனவும் குறிப்பாக ரஜினியின் படத்தை நோர்வேவில் திரையிட மாட்டோம் என
நோர்வே தமிழ் திரைப்பட விழா குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவின் இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு.,
நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்!
எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம்.
எமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது.
எமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜனிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.
கடந்த சில மாதங்களாக அவருடைய "ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை" நேற்று (30.05.18) கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்!
கடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜனி அவர்கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை!.
எமது 13 மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவீட்டில் "ஒரு நடிகனாக போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்" என்று மிகவும் கீழ்த்தனமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
இவற்றின் வெளிப்பாடாக நோர்வே நாட்டில் இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.
இத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்த் இன்று தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்டங்களை தொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்!
தமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார் " போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம்" எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை!
இவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திரையிடமாட்டடோம்!
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேன். "காலா" திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது!
இப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள்!
விசேடமாக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் !
உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்!
உலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம் !
வசீகரன் சிவலிங்கம்
இயக்குனர்
நோர்வே தமிழ் திரைப்பட விழா
நோர்வே தமிழ்த் திரைப்பட
விநியோகஸ்தர் குழுவின் நிர்வாக உறுப்பினர்.
0 comments:
Post a Comment