சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவருடன், பாதுகாப்பு உத்தியோகத்தர் சிறிது நேரம் மாயமாகியிருந்ததாக, சிறுமியின் தாயார் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று (12) இரவு இந்த சம்பவம் நடந்தது.
கொடிகாமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் தனது 14 வயது சிறுமியை காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
ஒன்றரை வயதான கடைசி மகளையும் பிறிதொரு நோய்க்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார். அவர் கடைசி மகளுடன் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 14 வயதான சிறுமி நோயாளர் விடுதியில் சிறிது நேரம் இருக்கவில்லை. இதன்போது, குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் எங்கேயென விசாரித்தபடி சிறுமியின் தாயார் விடுதிக்கு வந்தார்.
குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் விடுதியில் இருக்கவில்லை. அங்கிருந்த 3 பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் 2 பேர் வெவ்வேறு காரணங்களை குறிப்பிட்டு வெளியில் சென்றிருந்தனர்.
சற்று நேரத்தின் பின் சிறுமி விடுதிக்கு வந்தார். பாதுகாப்பு உத்தியோகத்தரும் வந்த பின், வைத்தியசாலை தரப்பினர் அது பற்றி பொலிசாருக்கு அறிவித்தனர்.
பாதுகாப்பு உத்தியோகத்தருடன் தவறான தொடர்பு கொண்டதாக தாயார் சுமத்திய குற்றச்சாட்டை சிறுமி மறுத்தார். தான் அவருடன் விடுதியின் பின்னாலிருந்து பேசிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தருடன் தான் ஏற்கெனவே பழகியதாகவும், அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாதென தாயார் கையில் சூடு வைத்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்று பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னுடன் கதைத்ததும், தாயாரின் கண்டிப்பை மறந்து அவருடன் பேசிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாயார் தனது மகளை காணவில்லை, குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரையும் காணவில்லையென வைத்தியசாலை தரப்பில் முறையிட்டதுடன், இருவரும் “ஒன்றாக இருந்ததை“ சிறுமி ஒப்புக்கொண்டால், இந்த விவகாரத்தை பெரிதாக்காமல், இருவரையும் மணம் முடித்து வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் 16ஆம் திகதி சிறுமி பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்.
0 comments:
Post a Comment