இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு மண்டபத்துக்குள் தன்னை அனுமதிக்கவில்லையென சசிகலா ரவிராஜ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், சசிகலா ரவிராஜ் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், இதனை தெரிவித்துள்ளார்.
தலைவர் தெரிவில் வாக்களிப்பதற்கான பட்டியலில் தனது பெயரும் உள்ளதாக கட்சியினால் அறிவித்தல் வழங்கப்பட்டு, திருகோணமலைக்கு அழைக்கப்பட்டதாகவும், திருகோணமலைக்கு வந்த பின்னர், தன்னை மண்டபத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் தனது பெயர் உள்ளதாக குறிப்பிட்ட, கட்சி தலைமை, இன்றைய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும், எனினும், இங்குள்ள பட்டியலில் தனது பெயர் இல்லையென்றும், பொதுக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதிலேயே கட்சிக்குள் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் உள்ளிட்ட பலர் மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.
இதேவேளை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி தலைவரினால் பட்டியல் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சி.சிறிதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
மண்டபத்துககுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மற்றும் சிலர் பலவேறு சந்தேகங்களை எழுப்பினர். கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம் கையொப்பம் இட, பேச முடியாத நிலையில் உள்ளதாக கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக அறிந்தோம். ஆனால் அவரது கையொப்பத்துடன் ஒரு பட்டியல் இங்குள்ளது. அதில், தலைவர் மாவை சேனதிராசா நியமித்த பட்டியல் உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தில் அப்போதைய செயலாளர் கி.துரைராசசிங்கம், சுமந்திரன் தரப்புடன் இணைந்து சதி செய்திருந்தார். அதனால் அவரது செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தற்போதைய பதில் செயலாளரும், சுமந்திரன் வெற்றியீட்டுவதற்காக, மாவையின் தொடர்பை துண்டித்து, அவர் அளித்த பட்டியலை நீக்கி, அவ்வாறான செயல்களில் ஈடுபட்டாரா என்ற எமது சந்தேகத்தை கட்சி நிவர்த்தி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
0 comments:
Post a Comment