புற்றுநோய் மருந்தென கூறி உப்புத்தண்ணீர் செலுத்தியது அம்பலம்: கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றொரு கொடூரம்!
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 11 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி அறிக்கையை நேற்று (19) மதியம் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கு நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இங்கு, உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஜெர்மன் ஆய்வகம், கேள்விக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்தில் மனித உடலுக்கு நச்சுத்தன்மையுள்ள பாக்டீரியா நீர் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
மேலும், சந்தேக நபர் வழங்கிய ரிட்டுக்ஸிமாப் கரைசலை பரிசோதித்தபோது, புற்றுநோய் எதிர்ப்பு மருந்து என்று விளம்பரப்படுத்தப்படும் ரிட்டுக்ஸிமாப் கரைசலில், புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய எந்த புரதமும் இல்லை என்றும், உப்பு மட்டுமே இருந்தது என்றும் சோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சோதனைக்காக வழங்கப்பட்ட கரைசல்களின் உள்ளடக்கம் குறித்து நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்த சட்டமா அதிபர் துறை, குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளில் உப்பு நீர் மற்றும் பாக்டீரியாவால் மாசுபட்ட கரைசலை வழங்க அரசாங்கம் 14.44 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வழக்கை மீண்டும் ஜூலை 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை அந்த திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment