பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.
அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.
தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்து வந்த ஆனந்த அளுக்கமே உள்ளடங்கலாக 100 தொடக்கம் 102 வரையான எம்.பிக்களின் ஆதரவுள்ளது.
ரவி கருணாநாயக்க தலைமையில் எத்தனை உறுப்பினர்கள் பிரிந்து வருவார்கள் என்பதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பதிலுமே, யார் பிரதமர் என்பது தங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் பட்சத்தில் எந்த தரப்பையும் ஆதரிக்காமல்- வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அதாவது, கூட்டமைப்பின் முடிவுகள் அனைத்தையும் தாமே எடுத்து, பங்காளிக்கட்சிகள் அதன்படி நடக்க வேண்டுமென்ற கோதாவில் இயங்கிவரும் தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கு ஒரு அதிர்ச்சி டோஸ் கொடுக்க தயாராகி வருகிறார்கள்.
ரெலோ, புளொட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மட்டத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இரண்டு கட்சிகளிலும் தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
“யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான பேச்சில் எம்மையும் இணைக்காமல்- எமக்கு தெரியாமல் பேச்சுக்களை முடித்து விட்டு, ஒரு நபரை குறிப்பிட்டு அவரை ஆதரிக்கும்படி கூட்டமைப்பு தலைமை- தமிழரசுக்கட்சி- சுட்டிக்காட்டினால், இம்முறை அதை ஏற்பதில் சிக்கலிருக்கும்.
2015 ஆட்சி மாற்றத்தின் முன்னதாகவும் இப்படித்தான் நடந்தது. தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து நாடுகளில் சில சுற்று இரகசிய பேச்சில் ஈடுபட்டனர். அப்போது எமக்கு அதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை. அரசியலமைப்பு பணியொன்று நடந்தது. அது இப்பொழுது முட்டுச்சந்தியொன்றில் சிக்கியுள்ளது.
இந்த பணியில் எமது அனுபவத்தின் அடிப்படையில் இயங்கினால் வேறுவிதமாக இந்த விவகாரத்தை கையாண்டிருப்போம். ஆனால், அரசியலமைப்பு உருவாக்க பணியில் நமது பங்கு இருக்கவில்லை.
ஆனால் அது பூரணப்படுத்தப்படாததன் விளைவை நாமும் ஏற்க வேண்டியுள்ளது. இந்தநிலைமை மீண்டுமொருமுறை வருவதை நாம் விரும்பவில்லை. அதனால், நாம் பங்குபற்றாத எந்த பேச்சின் முடிவையும் ஆதரிக்கலாமா என்பது தொடர்பாக தீவிரமாக யோசித்து வருகிறோம்“ என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர்.
ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இப்பொழுது கனடாவில் தங்கியிருக்கிறார்.
நாடாளுமன்றகுழு ஒன்றுடன், ஏற்கனவே திட்டமிட்ட பயணமாகவே கனடா சென்றிருக்கிறார். ஆனால், மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றபோது, அவர் இலங்கையில் இருந்தார். அதன்பின்னர்தான் கனடா புறப்பட்டு சென்றார்.
நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்கும்போது, செல்வம் அடைக்கலநாதன் கனடாவில் தங்கியிருந்தார்.
நாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் கூட்டத்தை இந்த நாட்களில் கூட்டியிருந்தால் செல்வம் அடைக்கலநாதன் நிச்சயம் அதில் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.
கடந்த சில மாதங்களாகவே ரெலோ, புளொட் அமைப்புக்கள் தமிழரசுக்கட்சியின் ஏகபோக நடவடிக்கைகளால் உள்ளார்ந்த அதிருப்தியுடன் இருந்துவருகிறது.
அண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்திலும், பங்காளி கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட இப்படித்தான் முடிவெடுத்திருந்தன. ஆனால் ரணில் விக்கிரமசிங்க விசயங்களை கையாள்வதில் கில்லாடிதானே.
நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில் பங்காளிகளுடன் நேரில் கதைத்து, தனக்காக வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.
அதனால் அப்போது தட்ட முடியவில்லை. ஆனால் இம்முறை, இரண்டு கட்சிகளும் கொஞ்சம் உசாராகவே இருப்பதாக தெரிகிறது.
தம்மை பங்காளிகளாக்காமல் எடுக்கும் முடிவுகளிற்கு இனியும் தலையாட்ட மாட்டோம் என பங்காளிகள் எடுத்த தீர்மானம் எடுத்துள்ளனர்.
கொள்கை முடிவுகளில் தம்மை இணைத்துக் கொள்வதில்லையென்ற அவர்களின் முடிவு, நீண்டநாள் அதிருப்தியால் ஏற்பட்டது.
இந்த அதிருப்திகள் உருவாகிய சமயத்தில், அதற்கு எண்ணெய் வார்ப்பதை போன்ற சம்பவமொன்றும் நடந்தது.
2015 நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் செலவாக ஒவ்வொரு கட்சிக்கும் சில இலட்சங்கள் தமிழரசுக்கட்சியால் வழங்கப்பட்டது.
இந்திய தூதரகம் வழங்கிய பணத்தில் வழங்கப்பட்டது. அப்போது கூட்டமைப்பில் நான்கு கட்சி. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளிற்கு அந்த பணம் சென்றது. ஆனால், அதைவிட அதிக பணத்தை தமது கட்சி செலவிற்கு எடுத்துக் கொண்டார்கள்.
தேர்தல் முடிந்ததும் இந்திய தூதரகத்தின் பொறுப்பான அதிகாரியொருவர், அங்கத்துவ கட்சியொன்றின் தலைவரை சந்தித்து பேசும்போது, தேர்தல் பரப்புரையை பற்றியும் பேச்சு வந்தது.
தேர்தல் செலவுகள் எகிறிக் கொண்டு போவதை பற்றி கட்சி தலைவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
இதற்காகத்தானே பணம் வழங்குகிறோம் என குறிப்பிட்ட அதிகாரி, வழங்கிய மொத்த தொகையை குறிப்பிட்டிருக்கிறார்.
இதை கேட்ட கட்சி தலைவருக்கு தலை சுற்றாத குறையாம். அள்ளியெடுத்து விட்டு, கிள்ளி கொடுத்திருக்கிறார்களே என்ற கோபத்தில் மற்றைய கட்சிகளின் தலைவர்களிற்கும் விசயத்தை பரிமாறினாராம்.
இந்த கடுப்பு அங்கத்துவ கட்சிகளிற்கு உள்ளது. அதனால்தான், இனி கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட கூட்டங்களிற்கு நாங்களும் வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க தயாராகிறார்கள்.
இந்த நிலையை அறிந்த சம்பந்தன் சமரச முயற்சி செய்ய இலங்கையில் உள்ள பங்காளி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் மேற் கொண்டும் அவை பலனின்றி இருப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் நலனிற்காக அல்ல பணத்தை பங்கீடு செய்வது தொடர்பிலான விடயத்திற்காகவே இந்த மூடிவு...
இவர்கள் எல்லாம் தமிழர்களின் தலைவர்கள்...