நாடாளுமன்றின் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதன்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் புதிய நபர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அனுகூலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் கட்சி உள்மட்டத்தில் நடந்த கூட்டத்தினையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தனர்.
அதில் உறுப்புரை 42(4) இல் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கேற்ப பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் நபர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் அனுகூலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனையடுத்தே சபாநாயகர் ஜனாதிபதிக்கு மேற்படி கடிதத்தினை அனுப்பியுள்ளார்.
இதன்படி, ”நான் இந்த கோரிக்கையை ஒரு ஜனநாயக மற்றும் நியாயமான கோரிக்கையாக கருதுகிறேன்.
ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் ஆணையை பெற்ற அரசாங்கத்தின் தலைவராக, அந்தக் கோரிக்கையை நீங்கள் பரிசீலிக்கும்படி நான் கோருகிறேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஊடகங்கள் வழியாக பல்வெறுபட்ட நபர்கள் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்திவருவதாகவும் இது நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துபோயுள்ள தன்மையினைக் காட்டுவதாகவும் சபா நாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பல நாடுகள் தமது பிரசைகளுக்கான பயண எச்சரிக்கையினைப் புதுப்பித்துள்ளதாகவும் சபா நாயகர் சுட்டிக்காட்டினார்.
எனவே எதிர்வரும் 16ஆம் நாளன்று பாராளுமன்றில் பிரேரணை நிறைவேற்றும்வரை இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என கோருவதாக சபாநாயகர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment