அலரி மாளிகைக்கான மின்சாரம், நீர் விநியோகத்தை துண்டிக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார் என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. நானே பிரதமர் என மஹிந்த கூறிவரும் நிலையில், சட்டரீதியான பிரதமர் தானேயென ரணில் கூறிவருகிறார். இதனால் அலரி மாளிகையிலிருந்து ரணில் வெளியேறவில்லை. ரணிலை பாதுகாப்பதற்காக ஐதேக எம்.பிக்கள் மற்றும் பெருமளவான தொண்டர்கள் அலரி மாளிகையில் குழுமியுள்ளனர்.
அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேற அரசாங்க தரப்பிலிருந்து சில காலஅவகாசங்கள் வழங்கப்பட்ட போதும், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள், அலரி மாளிகையை விட்டு வெளியேறுகிறோம் என ஐதேக அறிவித்துள்ளது.
இதேவேளை, 100 இற்கும் அதிகமான எம்.பிக்கள் எழுத்து மூலம் ரணிலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரணிலின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்பு பிரிவில் வெறும் பத்துப் பேரை மாத்திரம் அனுமதிக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் அலரி மாளிகையின் தலைமை பொலிஸ் அத்தியட்சகருக்கு நேற்றிரவு இந்த உத்தரவு பறந்துள்ளது.
அத்துடன் அலரி மாளிகைக்கான நீர், மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment