யாழ் இளைஞன் கொலையின் மர்மம் துலங்கியது: அக்கரைப்பற்றில் இருவர் கைது!
யாழ்ப்பாணம், வடராட்சி பகுதியில் இளைஞன் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தின் கொலையாளிகள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரும் இன்று (25) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, நெல்லியடி பொலிசாரால் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, அக்கரைப்பற்றை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
வடமராட்சி, கரணவாய், முதலைக்குழி பகுதியை சேர்ந்த இராஜகுலேந்திரன் பிரிந்தன் என்ற இளைஞன், கடந்த 17ஆம் திகதி குத்திக் கொல்லப்பட்டிருந்தார்.
நள்ளிரவில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றை நம்பி, வீட்டை விட்டு வெளியில் சென்றவர், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன.
அவரது இரண்டு தொலைபேசிகளையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருந்தனர்.
தொலைபேசி அழைப்பு பகுப்பாய்வின் மூலம், அவருக்கு இறுதியாக அழைப்பேற்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த இலக்கத்துக்குரியவர், அம்பாறை, அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர்.
நேற்று முன்தினம் அக்கரைப்பற்றுக்கு சென்ற காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர், அந்த நபரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை மர்மம் துலங்கியது.
அந்த இளைஞனின் மூத்த சகோதரன் பிரான்ஸில் வசிக்கிறார்.
கொல்லப்பட்ட இளைஞனும் பிரான்ஸில் வசித்து விட்டு இலங்கை திரும்பியவர். இருவருக்கும் பிரான்ஸில் தகராறு ஒன்று எழுந்துள்ளது.
கைதான இளைஞனின் சகோதரினின் தனிப்பட்ட விவகாரம் மற்றும் பணப்பரிமாற்ற விவகாரத்தால், அவரை கொல்ல யாரிடமாவது ஒப்பந்தம் வழங்குமாறு சகோதரன் கேட்டதாக கைதான இளைஞன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போதைக்கு அடிமையான முஸ்லிம் இளைஞன் ஒருவரை, பிரான்ஸூக்கு அனுப்பிவிடுவதாக குறிப்பிட்டு, கொலைக்கு உடந்தையாக பயன்படுத்தியுள்ளனர்.
இருவரும் யாழ்ப்பாணம் வந்து, கொல்லப்பட்ட நபரின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை பார்வையிட்டும் உள்ளனர்.
பின்னர், கொலைக்கு திட்டமிட்டு யாழ் நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். கொல்லப்பட்ட இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி பார்சல் ஒன்று வந்துள்ளதாக தெரிவித்து, வீட்டிலிருந்து வெளியே அழைத்துள்ளனர்.
இதன்போது அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
கைதான இருவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.






0 comments:
Post a Comment