Sunday, September 3, 2023
யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது | Jaffna Youth Arrested Early Morning In Katunayake
யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
ஜோர்தானுக்கு செல்லும் வகையில்
குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஜி 9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார்.
எனினும் இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்போதனா சிகிச்சையில் அசமந்தம்!காச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட கை.
சிகிச்சையில் அசமந்தம்!காச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட கை.
7 வயதில் அவள் கனவுகளை கலைத்த யாழ்போதனா வைத்தியசாலை.
அண்மைக்காலமாக வவுனியா, கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் நிகழ்ந்த வைத்திய தவறுகளை போலவே காச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையை கழற்றும் அளவிற்கு வைத்திய தவறு ஒன்று நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
தாதியர் ஒருவர் நாளத்தில் ஏற்றவேண்டிய Antibiotics ஐ நரம்பில் ஏற்றியதால் இந்த பரிதாப நிலை சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது.
சிறுமி வலியால் அழுது துடித்த போதும் அது காச்சலால் என தாதி பதிலளித்துள்ளார். குறிப்பாக அவ் குறித்த விடுதிக்கு பொறுப்பாக பல வைத்தியர்கள் அதாவது Consultant Paediatrician, SHO, HO, Head Nurse உட்பட தாதியர்கள் பலர் என கடமைக்கு நியமிக்கப்பட்டிருந்த போதும் குறைந்தபட்சம் விடுதியில் இரவு கடமையில் இருக்க வேண்டிய HO உட்பட எவரும் இப்பிரச்சனையை கவனிக்கவில்லை.
தவறான இடத்தில் Antibiotics ஐ ஏறியதால் பிள்ளையின் கையை பாதிப்படைய செய்தது. இதனை அடுத்தே அவசர அவசரமாக செயற்பட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் கையை கழற்றியுள்ளனர்.
பல பேரின் உயிரை காப்பாற்றும் வைத்தியர்கள் இப்பிள்ளையின் கையை கழற்றிய சம்பவம் வைத்திய துறையின் கறைபடிந்த விடயமாக மாறியுள்ளது.
உயிரை காப்பாற்றும் உன்னத துறை சட்டங்களை தமக்கு சார்பாக மாற்றிக்கொண்டு வியாக்கியானம் கூறுவதுடன் கடந்து போகின்றனர்.
இந்த பொறுப்பற்ற நிலைக்கு சிறுமியின் பெற்றோரும் இயல்பாக கடந்து போகாமல் இப்படியானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி செயற்படுவதே இத்தகைய தவறுகள் ஏற்படுவதை தடுக்கும்.
தங்கள் தவறை மறைக்க ஆயிரம் செய்வார்கள். அதற்காக சட்டத்தின் முன் நிறுத்துவதை தவிர்க்க கூடாது. தவறு இழைத்தவர்களுக்கு படிப்பினையாக கூட இருக்கும்.
இவ்வாறான தவறு இழைப்போருக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
Saturday, September 2, 2023
வடக்கு கிழக்கில் விகாரைகளை ஏன் நிர்மாணிக்கக்கூடாது..! அமைச்சர் விதுர கேள்வி | Why Not Construct Temples In North East
வடக்கு கிழக்கில் விகாரைகளை ஏன் நிர்மாணிக்கக்கூடாது..! அமைச்சர் விதுர கேள்வி
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு - கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது?" என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.
'திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது' - என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது - புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது?
அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு - கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை.
பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா?
நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன.
உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.
எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை - மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன என தெரிவித்துள்ளார்.
கனடா அனுப்புவதாகக் கூறி பண மோசடி - சந்தேகநபருக்கு விளக்கமறியல் | Money Fraud Claiming To Send Canada Suspect Arrest
கனடா அனுப்புவதாகக் கூறி பண மோசடி - சந்தேகநபருக்கு விளக்கமறியல்
கனடா அனுப்புவதாகக் கூறி வவுனியாவில் பண மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றிருந்தார்.
ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றிருந்ததுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு
எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரித்தானியாவையே மூழ்கடிக்கும் சாத்தான் 2 ஏவுகணை - அதிரடியாக களமிறக்கும் ரஷ்யா | Russian Missile Satan 2 Launch Putin Announcement
பிரித்தானியாவையே மூழ்கடிக்கும் சாத்தான் 2 ஏவுகணை - அதிரடியாக களமிறக்கும் ரஷ்யா
நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யா தற்போது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாத்தான் 2 என அழைக்கப்படும் குறித்த ஏவுகணையை போரில் களமிறக்க தயார் நிலையில் வைத்திருக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
208 தொன் எடை கொண்ட அந்த ஏவுகணையானது 114 அடி நீளம் கொண்டது எனவும் மணிக்கு 15,880 மைல்கள் வேகத்தில் 11,000 மைல்கள் தொலைவு பாயக்கூடியது.
சாத்தான் 2 ஏவுகணை
Russian Missile Satan 2 Launch Putin Announcement
கண்டம் விட்டு கண்டம் பாயும் அந்த ஏவுகணையானது ஒரே ஒரு தாக்குதலில் பிரித்தானியாவை மூழ்கடிக்க போதுமானது எனவும் கூறுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் நோக்கில் சாத்தான் 2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து 1,600 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிரித்தானியாவை வெறும் 6 நிமிடங்களில் அந்த ஏவுகணையால் சென்றடைய முடியும். மேற்கத்திய நாடுகளில் அந்த ஏவுகணைக்கு ஒப்பான ஆயுதம் என எதுவும் இல்லை என்றே கூறுகின்றனர்.
உத்தியோகப்பூர்வ தகவல்
2022ல் இருந்தே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மர்மமான முறையில் தாமதம் செய்யப்பட்டது.
மேலும், சாத்தான் 2 ஏவுகணையானது ஜூன் மாதத்தில் இருந்து களமிறக்கப்படும் என விளாடிமிர் புடின் அறிவித்திருந்தாலும், தற்போது தான் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சிலிருந்து வந்து சுவிஸ் கோவில்களில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்!! தமிழர்களும் உள்ளடக்கம்!!
சுவிஸில் உள்ள இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆலய நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.சுவிஸ் சட்டம் குற்றவியல் பின்னணி கொண்ட குடியேற்றக்காரர்களுக்கு எதிராக கடுமையாக்கப்பட்டு இருப்பதால், ஏனையா நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொது இடங்களில் தொடர் கொள்ளைகள் நடைபெறுவது குறைவாக இதுவரை காணப்பட்டு வந்துள்ளது.இருப்பினும், கடந்த ஆண்டு முதல் இந்துக் கோயில்கள் திட்டமிட்டுக் குறிவைத்துக் கொள்ளையிடப்பட்டு வருவதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த ஓகஸ்ட் 2023 முதல் இன்றுவரை 20இற்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்ககப்பட்டு நள்ளிரவிலும் அதிகாலையிலும் தொடர் கொள்ளைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில் உள்ள பல இந்து கோவில்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. கொள்ளைகள் காரணமாக இந்துக்கோவில்களுக்கு பொருள் இழப்புக்களும், சமய நெறிகள் மீறிய இடராகவும் உள்ளது.கோவில்களில் உள்நுழையும்போது கடைப்பிடிக்கப்படும் திருத்தன்மை கொள்ளையர்களால் மீறப்பட்டதுடன், பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார் ஒரு கோவில் நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்கின்ற ஒருவர்.
கோவில்களின் கண்காணிப்பு நிகழ்ப்படக் கருவிகளில் கொள்ளையர்களின் பதிவும் கண்டெடுக்கப்பட்டதுடன், சில இடங்களில் கொள்ளையர்களின் கையடையாளமும் பொலிஸாரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.சில கோவில்களில் கொள்ளை நடவடிக்கைகளில ஈடுபட்ட கொள்ளையர்கள் பிரான்ஸ் நாட்டு வண்டி இலக்கத்தகடுடன் வந்திருப்பதனையும், அவர்களின் இருவர் வெள்ளை நிறத்தவர் எனவும் ஒருவர் தமிழராக இருக்கலாம் எனும் ஐயமும் நிலவுகின்றது.
பாதிப்பிற்கு உள்ளான சில கோவில்கள் பொலிஸில் புகார் அளித்துள்ளன. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன் ஐயப்பாடு வெளிக்காட்டும் தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி மேலும் பாதிப்புக்கள் ஏற்படாது காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார்கள் என்று கூறுகின்றார்கள் சில கோவில்களின் நிர்வாகத்தினர்.
இது இவ்வாறு இருக்க, சுவிசிற்குள் தற்போது குற்றவியல் நோக்கில் பல நாட்டவர்களும் நுழைந்திருப்பதும் அவர்கள் தமிழர்களைக் குறிவைத்து கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டு வருவதும் பலருடைய வாய்மொழித் தகவலில் இருந்து அறியமுடிகின்றது. தொடருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழர் அருகில் வந்த நபரால் அவரது களுத்தில் இருந்த தங்க நகையினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச்சென்ற செயல் கடந்த 19.08.23 பேர்ன் நகரில் நடைபெற்றுள்ளது.சுவிஸில் 26 மாநிலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு சிறுகுடியரசாகவே இயங்குகின்றன. 26 மாநில பொலிஸாரையும் ஒருங்கிணைக்கும் சுவிஸ் நடுவனரசின் பொதுக்காவற்துறை துப்புத்துலக்க காலம் எடுத்துக் கொள்ளும்.
இந்நிலையில், விழாக்காலங்களில் பெறுமதிமிக்க நகைகளை அணிவதையும், அதுபோல் வீடுகளில் பாதுகாப்பு அற்று பெறுமதி மிக்க பொருட்களை அல்லது பணத்தை வைத்திருப்பதனையும் மக்கள் தவிர்ப்பதும் எப்போதும் விழிப்புடன் இருப்பதுமே தற்போதைய சூழலிற்குஒரே தீர்வாக அமையும்.
Friday, September 1, 2023
சிங்கப்பூரின் புதிய அதிபராக யாழ்ப்பாண தமிழன் - தேர்தலில் அமோக வெற்றி | Tharman Set To Be Singapore S Next President
சிங்கப்பூரின் புதிய அதிபராக யாழ்ப்பாண தமிழன் - தேர்தலில் அமோக வெற்றி!
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மும்முனை போட்டியில் வெற்றி
தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.
யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது.
தேர்தல் பிரசாரம் வரும் நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 30ஆம் திகதி) நிறைவு பெற்ற நிலையில், இன்று (செப்டம்பர் 1ஆம் திகதி) வாக்குப்பதிவு நடைபெற்றது.
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களித்தனர்.
சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில் இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
யார் இந்த தர்மன் சண்முகரத்னம்
சிங்கப்பூரின் புதிய அதிபராக யாழ்ப்பாண தமிழன் - தேர்தலில் அமோக வெற்றி | Tharman Set To Be Singapore S Next President
1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணைப் பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்..!!!
எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்..!!!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறைந்த விலையில் எரிபொருள் - சினோபெக்கின் அதிரடி அறிவிப்பு..! விலை விபரங்கள் உள்ளே...
சீனா பெட்ரோலிய நிறுவனமான சினோபெக் நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் (LIOC) அறிவித்துள்ள விலைகளை விட குறைவாகும்.
நேற்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் CPC மற்றும் LIOC ஆகியவை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
இந்த நிலையில்,சினோபெக் எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து அதன் சில்லறை எரிபொருள் விலையை அறிவித்துள்ளது.
குறைந்த விலையில் எரிபொருள் - சினோபெக்கின் அதிரடி அறிவிப்பு..! விலை விபரங்கள் உள்ளே... | Sinopec Company Fuel Prices
அதன்படி, சீன எண்ணெய் நிறுவனங்களின் எரிபொருள் விலை முறையே...
92 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 358/-
95 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 414/-
ஒட்டோ டீசல் - ரூ. 338/-
சூப்பர் டீசல் - ரூ. 356/-
CPC மற்றும் LIOC விலை விபரங்கள்
இந்த நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் (LIOC) நிறுவனங்களின் எரிபொருட்களின் விலைகள் நேற்று இரவு நடைமுறைக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்படியிலான விலை விபரங்கள்
92 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 361/-
95 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 417/-
ஒட்டோ டீசல் - ரூ. 341/-
சூப்பர் டீசல் - ரூ. 359/-



















