இத்தாலி தனது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அழிவை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு நண்டு இனத்தை சமாளிக்க அவசர பட்ஜெட் என்று 2.9 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளது.
மேற்கு அட்லாண்டிக்கில் இருந்து தோன்றிய `நீல நண்டு’ இத்தாலியில் பல இடங்களில் பரவி உள்ளுர் மட்டி மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடுகிறது. ஆரம்ப காலத்தில் ஒன்று அல்லது இரண்டு நீல நண்டுகளை மட்டுமே இத்தாலியர்கள் பார்த்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நீல நண்டுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவிட்டது.
Blue crab |இத்தாலி நீல நண்டு
இதனால் நத்தைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக இத்தாலியர்கள் வேதனையுடன் தெரவித்துள்ளனர்.
சரக்குக் கப்பல்கள் மூலம் இந்த வகை நீல நண்டுகள் இத்தாலிக்கு வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். நீல நண்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
வடக்கு இத்தாலியில் உள்ள போ நதிக்கு அருகில் இவற்றின் பரவல் அதிகமாக உள்ளது. கடல் உயிரியலாளர்களின் தரவுகளின்படி, போ நதிப் படுகையில் உள்ள 90 சதவிகித மட்டிகளை நீல நண்டுகள் உண்டு அழித்துவிட்டன.
இதன் காரணமாக வருங்காலத்தில் மட்டி உற்பத்தி துறை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என அச்சப்படுகின்றனர். இதனால் இத்தாலியின் பல பகுதிகளில் இருந்து தினமும் 12 தொன் வரை நண்டுகளை அழித்து வருகின்றனர். இந்த நிலை மாறாவிட்டால், இத்தாலியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் துறைகள் இரண்டையும் கடுமையாக பாதிக்கும்.
இத்தாலி நாட்டு விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லோலோபிரிகிடா, வடக்கு இத்தாலியில் உள்ள போ நதி பள்ளத்தாக்கின் டெல்டாவை பார்வையிட்டார். இது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய அவர் ஆக்கிரமிப்பு நண்டுகளை சமாளிக்க அவசர நிதியை அறிவித்ததோடு, டெல்டா பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களால் இயன்ற நண்டுகளைப் பிடித்து அழிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுவாக இத்தாலியர்கள் நத்தைகளை அதிகமாக விரும்பி உண்ணக்கூடியவர்கள். நீல நண்டுகள் அப்பகுதியில் உள்ள நத்தைகளில் 90% வரை உண்கின்றன என்று கடல் உயிரியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால்தான் நீல நண்டுகள் பெருகுவதைத் தடுக்க இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.
0 comments:
Post a Comment