யாழ்ப்பாணத்தின் மலக்கழிவுக் குளங்கள்🥲
படத்தில் வடமராட்சியின் 4 உள்ளூராட்சி மன்றங்களின்
1-கரவெட்டி பிரதேச சபை
2- பருத்துத்துறை நகரசபை
3-வல்வெட்டிதுறை நகரசபை
4- பருத்துத்துறை நகரசபை
மலகழிவு, உணவக கழிவு நீர் கொட்டப்படுவதற்காக தோண்டப்பட்ட ஒரு குளம்! பச்சையாக சொல்வதானால் பீ குளம் என்றே வைத்துக்கொள்ளுங்கள்!
இதன் அண்மித்த தூரத்தில் யாழ்ப்பாண நீரை நன்னீராக்கும் ஆறுமுகம் திட்டத்தின் நீர் பரப்பு காணப்படுகின்றது!
சாவகச்சேரி உள்ளிட்ட நகர/ பிரதேச சபைகளும் இவ்வாறான குள அமைப்பிலேயே மலக்கழிவுகளை கொட்டுகின்றன!
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் சுண்ணாம்புக்கற் பாறை வெடிப்புகளிலேயே தொடர்பு பட்ட நிலையில் Aquifer ஆக உள்ளது என்பது இப்போது யாவரும் அறிந்ததே!
யாழ்ப்பாணத்தின் ஆழத்தில் உள்ள blackish water எனப்படும் உவர் நீருக்கு மேல் fresh water lens ஆக மிதந்துகொண்டிருக்கும் நிலத்தடி நன்னீரின் அளவு என்பது கிட்டத்தட்ட 3- 4 இரணைமடுக் குளங்களின் மொத்த கொள்ளவுக்கு ஒப்பானது என்று கூறப்படுகிறது. இரணைமடுக்குளத்தின் 2 அடி அதாவது 10-20 MCM தண்ணீருக்காக பிரதேசவாதத்தையும் வன்மங்களையும் கொட்டும் நம் சமூகம் எமது மிகப்பெரிய சொத்தான கிட்டத்தட்ட 300-500MCM நிலத்தடி நன்னீரை பாதுக்காக்க எந்த அளவுக்கு முயற்சி எடுக்கிறோம் என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.
சுண்ணாம்புக்கல் நிலத்தட்டு கொண்ட எமது புவியியில் அமைப்பில் திண்மக்கழிவுகளை கவனமாக கையாளாமல் விட்டால் அவை எமது நிலத்தடி நீரை மிக்கப்பெரிய அளவில் பாதிக்கும். யாழ்ப்பாணத்தான் குடிப்பதற்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கிவிட நினைக்கும் நாம் நமது பகுதியின் விவசாயம், கால்நடைகள், சூழல்த்தொகுதியின் ஏனைய உயிரினங்களுக்கான நன்னீரையும் பற்றி சிந்திக்க வேண்டும்.
விவசாயத்துக்கும் கால்நடைகள் உள்ளிட்ட அந்த ஏனைய உயிரினங்களுக்கும் யார் தண்ணீரை இரணைமடுவிலும் தாளையடியிலும் பாலியாற்றிலும் விலைகொடுத்து வாங்கி கொடுப்பார்கள்?
பல்லாயிரும் வருடங்களாக நமது நிலத்தடி நீரை நாம் கவனமாக முகாமைத்துவம் செய்து வந்ததாலும் மலக்கழிவு அகற்றல் உள்ளிட்ட விடையங்களில் பாரம்பரியமான முறைகளை பயன்படுத்தி போதிய இடைவெளிகளை கொடுத்து அவை நிலத்தடி நீருடன் கலக்காமல் பாதுகாத்து வந்திருக்கிறோம்.
இப்போது வசதிகளும் பணமும் வந்ததும் எமது சொந்த வளங்களை உதாசீனப்படுத்துகிறோம்.
எங்கள் சொந்த சுயநலத்துக்காக சமூகத்தின் உயிர்நாடியான நீர் வளத்தை மாசுபடுத்துகிறோம்.
வெளியூரில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து பாவித்து அதில் வரும் கழிவுத்தண்ணீரையும் கொண்டு படத்தில் உள்ளவாறு புதிய பல குளங்களை எதிர்காலத்தில் உருவாக்க உள்ளோம். யாழ்பாணத்தின் நீர் முகாமைத்துவத்திற்கு முதலில் செய்யவேண்டியது எமது நிலத்தடி நீரை பாதுகாப்பது.
1.அதன் முதற் படியாக திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு குடாநாடு தழுவிய பொருத்தமான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
மலக்கழிவுகள், இரசாயண கழிவுகள், வாகன கழுவுமிடங்கள், திருத்துமிடங்கள், பெற்றோல் நிரப்பு நிலைய கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளும் நிலத்தடி நீருடன் கலக்காமல் பொருத்தமாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்டவேண்டும்.
2. யாழ்பாணத்தின் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சும் நிறுவனங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு குறிப்பாக யாழ்ப்பாணத்து நிலத்தடி நீரை போத்தலில் அடைத்துவிற்கும் வியாபாரம் முடிவுறுத்தப்படவேண்டும். அவ்வாறான உற்பத்திகள் அதிக lens உள்ள அல்லது ஆற்று நீரை நீர் மூலமாக பயன்படுத்தக்கூடிய இடங்களுக்கு மாற்றப்படவேண்டும்.
3. நிலத்தடி நீர் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது யாழ்ப்பாணத்தின் அத்தனை ஜீவராசிகளுக்கும் சொந்தமானது என்பதும் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் சுண்ணாம்புக்கல் வெடிப்புகளூடு சுண்ணாகம் உள்ளிட்ட Aquifer களாக பின்னிப்பிணைந்துள்ளது. ஆக இந்த நீரை பாதுகாக்க பல்வேறு தரப்புகளும்
ஒன்றிணைந்து புரிந்துணர்வோடும் பொறுப்புணர்வோடும் கரம் கோர்த்துப் பயணிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், துறைசார் வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்🙏
நன்றி.
திருநாவுக்கரசு தயந்தன்
2025.01.06
(மேற்படி மலக்கழிவுகள் கொட்டப்பட உருவாக்கப்பட்ட குளம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து உதவிய நண்பர்களுக்கு நன்றி)
0 comments:
Post a Comment