ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் முன்வைத்த, புலம்பெயர்ந்தோர் சிலரை நாடுகடத்துதலை ஒழுங்குபடுத்தும் புதிய புலம்பெயர்தல் மசோதாவை கேபினட் ஏற்றுக்கொண்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் சிலரை எளிதில் நாடுகடத்த சட்டம்
ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Nancy Faeser, சில புலம்பெயர்ந்தோரை விரைவாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு வழிவகை செய்யும் மசோதா ஒன்றை முன்வைத்தார்.
இந்த மசோதா, ஆபத்தானவர்கள் என கண்டறியப்பட்ட புலம்பெயர்ந்தோரை, அதாவது குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஜேர்மன் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும். மேலும், அவர்களை நாடுகடத்துவதற்காக அதிகாரிகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும் வகையில், அத்தகையவர்களின் தடுப்புக் காவல், 10 நாட்களில் இருந்து 28 நாட்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட நபர் மற்றவர்களுடன் தங்கவைக்கப்படும் நிலையில், அவரது படுக்கையறையைத் தவிர மற்ற அறைகளுக்குள் நுழையவும், அவர்களுடைய மொபைல் மற்றும் கணினிகளை சோதனையிடவும் பொலிசாருக்கு அனுமதியளிக்கப்படும்.
ஆளுங்கட்சி திடீரென இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம்?
ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பழமைவாத மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே நாடு கடத்தலை எளிதாக்கும் நடவடிக்கையை ஆளும் கூட்டணி அரசாங்கம் எடுத்துள்ளது.
காரணம், புலம்பெயர்தல் தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு உருவாகியுள்ள கவலைகளே, வெற்றிபெற்ற வலதுசாரியினருக்கு ஆதரவாக அவர்களை வாக்களிக்கத் தூண்டியதாக கருத்துக்கள் பரவிவருவதுதான்.
ஆகவே, மக்களையும் அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் வகையில், புலம்பெயர்தலுக்கெதிராக ஏதாகிலும் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்துக்குள்ளாகியுள்ளது, ஆளும் ஓலாஃப் ஷோல்ஸ் கூட்டணி அரசு.
நாடுகடத்துதலை விரைவாக்க கேபினட் ஒப்புதல்
இந்நிலையில், தங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை எளிதாக நாடுகடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை, நேற்று ஜேர்மன் கேபினட் ஏற்றுக்கொண்டுள்ளது.
சில எதிர்க்கட்சிகளும் இந்த விடயத்தில் ஆளுங்கட்சிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. என்றாலும், இந்த சட்டம் அமுல்படுத்தப்படவேண்டுமானால், அது ஜேர்மன் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நவம்பரில் அது தொடர்பான வாக்கெடுப்புக்கு திட்டமிடப்பட்டுவருகிறது.
Germany Cabinet Approve Plan To Speed Deportations
Yahoo News
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல், செப்டம்பர் 30ஆம் திகதி வரையிலான ஒன்பது மாதங்களுக்குள், 12,000 பேர் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக, ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment