கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அங்கு, சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் விக்கிரமசிங்க குடும்பத்தை ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களிடம் பேச வேண்டாம் என நீதிமன்றம் சந்தேகநபருக்கு உத்தரவிட்டுள்ளது.
அவர்களில் ஒருவரான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் கல்வி கற்கும் ஃபேப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞரே இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலையில் பயங்கரவாதி கூரிய ஆயுதத்தை பயன்படுத்தியதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
புதன்கிழமை இரவு 10:52 மணியளவில் 911 என்ற எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததாகக் ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவத்திற்கு முன்னர் இந்த இலங்கைக் குடும்பத்திடமிருந்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என ஒட்டாவா பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:
தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்
காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.
குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் சமீபத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், இரண்டு மாத வயதுடைய இளைய மகள் மட்டுமே கனடாவில் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒட்டாவாவில் இதுபோன்ற படுகொலைகள் ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களில் தலைநகரில் நடந்த மிகக் கொடூரமான படுகொலை இது என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உயிரிழந்த இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.
0 comments:
Post a Comment