யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண நீதிவானும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியும் இன்று பார்வையிட்டனர்.அரியாலை, சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மின் தகன மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இந்த மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இதை தொடர்ந்து யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஆனந்தராஜா, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக, அந்த பகுதியில் அகழ்வுப் பணிக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென அறிய முடிகிறது.
மனிதப்புதைகுழி?
சித்துபாத்தி இந்து மயானத்தின் முன்னைய எல்லைக்கு வெளியே உள்ள பகுதியிலேயே தற்போது இந்த மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மயானத்திற்கு பின்பக்கமாக உள்ள காணி அண்மையிலேயே தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும், அதிலேயே தற்போது மின்தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மயான நிர்வாகத்தினர் குறிப்பிடுகிறார்கள்.இதுவரை மயானம் இருந்த எல்லைக்கு வெளியில், எந்த மனித எச்சங்களும் எரிக்கவோ, புதைக்கவோபடவில்லையென்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த பின்னணியில், மீட்கப்படும் மனித எச்சங்கள், மற்றொரு மனிதப்புதைகுழியின் தோற்றுவாயா என்ற அச்சம் எழுந்துள்ளது.இதற்கு காரணங்கள் சில உள்ளன.
முதலாவது- செம்மணி ஏற்கெனவே மனிதப்புதைகுழிக்காக அறியப்பட்ட பகுதி. கிருசாந்தி உள்ளிட்ட பலர் அங்கு கொன்று புதைக்கப்பட்டிருந்தனர். செம்மணியில் அமைந்திருந்த இராணுவ முகாமிற்கு நெருக்கமான பகுதியிலேயே தற்போதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.இரண்டாவது- தற்போது மீட்கப்படும் எலும்புக்கூடுகள் நில மட்டத்திலிருந்து இரண்டடி ஆழத்திலேயே மீட்கப்பட்டுள்ளன. மயானத்தில் அடக்கம் செய்யப்படும் சடலங்கள் இரண்டடி ஆழத்தில் அடக்கம் செய்யப்படுவதில்லை. எலும்புக்கூடுகள் நிலமட்டத்திலிருந்து இரண்டடி ஆழத்தில் மீட்கப்பட்டது, இந்த எலும்புக்கூடுகள் சமயச்சடங்குகளின் பின்னர் முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் அல்ல என்ற வலுவான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.அந்த சடலங்கள் அசாதாரண சூழலுடன தொடர்புபட்டவை என்பது ஊகிக்க முடிகிறது. அது என்ன அசாதாரண சூழல்… மனிதப்புதைகுழியா.. அல்லது போரில் உயிரிழந்த ஒரு தரப்பினதா என்ற பல கேள்விகள் உள்ளன.முறையான விசாரணைகளின் பின்னரே இது பற்றிய இறுதி முடிவுக்கு வர முடியும்.
0 comments:
Post a Comment