சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 34 வயதான முன்னாள் ராணுவ கமாண்டோவாக பணியாற்றி வந்த முகமது அஸ்மான் ஷெரிப்தீன் , துப்பாக்கியால் சுட்ட பின் தப்பி ஓடும் போது , நீதிமன்றத்துக்குள் சுடுறாங்க என சொல்லிக் கொண்டே தப்பி ஓடியிருக்கிறான்.
அப்படி தப்பி ஓடிய கொலையாளி புத்தளம் பகுதியில் உள்ள பாலாவியில் வைத்து கைதாகியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட பின் தப்பி இந்தியாவுக்கு சென்று , அங்கிருந்து துபாய்க்கு செல்ல இருந்ததாக தெரியவருகிறது.
கொழும்பு, அளுத்கடையில் உள்ள எண் 5 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போல் மாறுவேடமிட்ட இரண்டு நபர்களும் இணைந்து , திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 3.2 ரிவோல்வரை வழங்க நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட இசார செவ்வந்தி என்ற பெண்ணே சட்ட புத்தகத்துக்குள் ரிவால்வரை மறைத்து வைத்து கொண்டு சென்று, நீதிமன்றத்துக்குள் கைமாற்றிக் கொடுத்துள்ளார் .
பொதுவாக நீதிமன்றத்துக்குள் செல்வோரை போலீசார் பரிசோதனை செய்தாலும் , வழக்கறிஞர்களை போலீசார் பரிசோதிப்பதில்லை. எனவே இந்த பலவீனத்தை கொலையாளிகள் சமார்த்தியமாக பயன்படுத்தியுள்ளனர்.
தவிர பாதுகாப்பு தரப்பில் எவரும் ஆயுதங்களோடு நீதிமன்றத்துக்குள் செல்ல தடை உண்டு. நீதிபதிக்கான பாதுகாப்புக்கு உள்ளவர்களிடம் மட்டுமே ஆயுதம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
கைதான நபரை விசாரணை செய்த போது, வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்ட நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட 3.2 ரிவோல்வரை நீதிமன்றத்திற்குள் இருந்து போலீசார் எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சந்தேக நபர் பல பெயர்களில் தோன்றி வந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அவரிடம் பல அடையாள அட்டைகள் இருந்துள்ளன. சந்தேக நபரிடம் வழக்கறிஞராக வழக்கறிஞர் அடையாள அட்டையும் இருந்துள்ளது.
அவர் முதலில் மொஹமட் அஸாம் ஷெரீப்டீன் என்ற பெயரிலும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என்ற பெயரிலும், அவர் தயாரித்த வழக்கறிஞர் அடையாள அட்டையில் கொடிகாரகே கசுன் பிரபாத் நிஷங்க என்ற பெயரிலும் தோன்றியுள்ளார்.
அதன்படி, இந்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு, அவரது உண்மையான தகவல்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் இந்த குற்றத்தைச் செய்ய அவருக்கு உதவியவர்கள், இந்த சதி தொடர்பான அனைத்து தகவல்களும் விசாரணைகளுக்குப் பிறகு வெளிப்படுத்தப்படும். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ள உள்ளது.
இந்த குற்றத்தில் தொடர்புடைய பெண் பற்றியும் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன. அவர் குற்றத்திற்கு உதவிகள் செய்துள்ளார் என்பது தற்போது நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அளுத்கடே நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் கணேமுல்லே சஞ்சீவை தனது நடவடிக்கையின் கீழ் கொன்றதாக துபாயில் இருந்து கமாண்டோ சலிந்த என்ற மற்றொரு பாதாள உலக செயற்பாட்டாளர் நெத் வானொலிக்கு தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு மூலம் நெத் வானொலிக்கு அழைப்பு விடுத்த அவர், அளுத்கடே நீதிமன்றத்தில் இந்த கொலை தன்னால் செய்யப்பட்டது என கூறியுள்ளார்.
அவருடன் வழக்கறிஞராக மாறுவேடமிட்டு வந்த பெண் பற்றிய தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான ரிவோல்வரை கொண்டு வந்ததாக கூறப்படும் இந்த பெண்ணின் பெயர் , பின்புர தேவகே இசாரா செவ்வந்தி என்றும், அவர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய பெண் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். அவர் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம வீதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.
அவர் தற்போது துபாய் நாட்டில் இருக்கும் மனுதினு பத்மசிறி பெரேரா அல்லது கெஹெல்பத்தார பத்மே என்ற பாதாள உலகத் தலைவருடன் இணைந்து கணேமுல்லே சஞ்சீவைக் கொல்ல திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரை கைது செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பை பொலிஸார் கோருகின்றனர். அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க தேவையான அறிவிப்புகளை விமான நிலையத்திற்கு பொலிஸார் ஏற்கனவே செய்துள்ளனர், மேலும் அவரது புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment