யாழ்ப்பாணம் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று மூன்றாவது தடவையாக அரச பொது நிதியில் மாலை மரியாதைகளோடு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது
கோத்தபாயா ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கு (20 கடைகள்) மஹிந்த ராஜபக்சே மற்றும் அங்கயன் இராமநாதன் ஆகியோர் திறப்பு விழா நடத்தியிருந்தனர்
பின்னர் திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருந்து போது இராஜாங்க அமைச்சராகவிருந்த திரு காதர் மஸ்தான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறப்பு விழா நடத்தியிருந்தனர்
இப்போது ஜேவிபியின் பணக்கார அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் சந்திரசேகரம் ஆகியோர் பொருளாதார மத்திய நிலையத்திற்கு திறப்பு விழா நடத்தியிருக்கின்றார்கள்
ஆனால் பொது நிதியில் திறப்பு விழா நாடகங்களை நடத்தும் இவர்கள் யாருக்கும் வடக்கு கிழக்கின் விவசாய பொருளாதாரம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து எந்த அக்கறையும் இல்லை
கடந்த காலங்களில் மொத்த உள்நாட்டு விவசாய உற்பத்தியில் 20.5% இனை வடக்கு- கிழக்கு பங்களிப்புச் செய்திருந்தது.
மொத்த நெல் உற்பத்தியில் 1/3 பங்கு வடக்குக் -கிழக்கு மாகாணங்களில் இருந்தே இலங்கைக்குக் கிடைத்தது.
கால்நடைகளைப் பொறுத்தவரையில், மொத்தக் கால்நடையில் கிட்டத்தட்ட 60% வடக்கு -கிழக்கு மாகாணங்களிலேயே காணப்பட்டது.
ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் பூர்விக குடி மக்களுக்கு சொந்தமான வளமிக்க விவசாய நிலமான வலி வடக்கில் 2,600 ஏக்கர் நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது
குறிப்பாக காங்கேசன்துறையில் மட்டும் பொதுமக்களை விரட்டி விட்டு அவர்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலத்தில் இராணுவம் விவசாயம் செய்கின்றது
கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பண்ணை, முல்லைத்தீவு தேராவில் விவசாய பண்ணை, மன்னார் வெள்ளாங்குளம் விவசாய பண்ணை,வவுனியா செட்டிகுளம் விவசாய பண்ணை உட்பட வன்னியின் குறைந்தது 13 விவசாய பண்ணைகளை ஆக்கிரமித்து இராணுவம் விவசாயம் செய்கின்றது
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விவசாய பண்ணைகள் ஊடக ஆண்டு தோறும் 15 மில்லியன் வருமானத்தை இராணுவத்தினர் உழைத்து வருகின்றார்கள்
கிளிநொச்சி மாவட்ட பண்ணைகள் ஊடக 13 மில்லியன் ரூபா வருமானத்தை இராணுவத்தினர் சம்பாதித்து வருகின்றார்கள்.
இதற்கு மேலதிகமாக வன விள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை தங்கள் வசப்படுத்தி வைத்திருக்கின்றது
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 32,110 ஏக்கர் நிலப்பகுதி வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 23,515 ஏக்கர் நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு இருக்கின்றது
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலத்தை வன விள திணைக்களம் ஆக்கிரமித்து உள்ளது
அதே போல திருகோணமலையில் பாணமுரே திலகவன்ச தேரர் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றார்
முல்லைத்தீவில் கல்கமுவ சாந்தபோதி தேரர் சில நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றார்
இது மாத்திரமின்றி வன்னி விவசாய பொருளாதாரத்திற்கு பங்களித்த 732 விவசாய நீர்நிலைகளை (குளம்) வன வள திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது
இது போதாதென்று வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள 370,000 கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் 300,000 கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தி வந்த மயிலத்தமடு மற்றும் மாதவனை போன்ற பகுதிகளிலிருந்து, தமிழ் பண்ணையாளர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இப்போது குறித்த விவகாரம் குறித்த நீதிமன்ற தீர்ப்புகளை கூட நடைமுறைப்படுத்த தயாரில்லை
ஜேவிபி அதிகாரத்திற்கு ஒரு வருடம் கடந்து விட்ட பின்னரும் விவசாய பொருளாதாரத்தை முடக்கி நிற்கும் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்று கொடுக்க ஜேவிபி தயாரில்லை
இதில் பல ஆக்கிரமிப்புகள் இராணுவமயமாக்களோடு இணைந்தது என்பதால் குறைந்தபட்சம் தீர்வு பற்றி சிந்திக்க கூட தயாரில்லை
ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் போல அரச நிதியில் திறப்பு விழா நடத்தி விளையாடுகின்றார்கள்.
இப்போது திறப்பு விழா நடத்தி விளையாடும் ஜேவிபி புத்திசாலிகள் தான் யாழ்ப்பாண சின்ன வெங்காயம் அறுவடை காலத்தில் சின்ன வெங்காய இறக்குமதிக்கும் கூட அனுமதித்து இருந்தார்கள்
உண்மையில் கடந்த காலங்களில் ஆண்டுக்கு மூன்று தடவைகள் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பெருமளவில் ஆண்டுக்கு ஒரு தடவை என்றாகி விட்டது
இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் தீர்வை யார் பெற்று கொடுக்க முடியும் ?
இதற்கு மேலதிகமாக சந்தைவாய்ப்பின்மை, சந்தை கழிவு , உற்பத்தி செலவீனம், பாதீனிய நெருக்கடி, நீர்ப்பாசனம், நவீன தொழிநுட்பம் என பல விளிம்பு நிலை விவசாயிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து சிந்திக்க கூட யாரும் இல்லை
பின்னர் உலகமே உற்பத்தி நோக்கி நகர்ந்து வரும் நிலையில் கடந்த காலங்களில் இலங்கையில் மொத்த விவசாய உள்நாட்டு உற்பத்திக்கு பங்களித்த வடக்கு கிழக்கு விவசாய பொருளாதாரத்தை முடக்கி விட்டு அரிசி, மரக்கறி, வெங்காயம், பால் என எல்லாவற்றையும் இறக்குமதி செய்கின்றார்கள்