சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
நியூட்ரல் (Neutral) மரணங்கள்…
மலையக பகுதிகளில் இடம்பெறும் அனேக வாகன விபத்துக்கள் வாகனங்களை சாரதிகள் நியூட்ரலில் செலுத்துவதால் இடம்பெறுகிறது. அதே போன்ற ஒரு நியூட்ரல் விபத்தாகவே எல்ல பஸ் விபத்தை பார்க்கவேண்டியிருக்கிறது.
தப்பியவர்களின் கூற்றுப்படி சாரதியின் இறுதி வார்த்தைகள் “பிரேக் பிடிக்குதில்லை” என்பதாக இருக்கிறது. குறித்த பஸ்சானது எல்ல எனும் உயர் நில பகுதியில் இருந்து அம்பாந்தோட்டையின் தங்காலை எனும் தாழ் நிலை பகுதிநோக்கி பயணித்துகொண்டிருந்தது. உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதிநோக்கி பள்ளத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் திடீரென பிரேக் பிடிக்கவில்லையெனில் அது ஏற்படுத்தும் விளைவு பாரதூரமானது. எனினும் முறையான சாரதியெனில் அதையும் தடுத்திருக்கலாம்.
குறிப்பாக மலையக பகுதிகளில் வாகனம் ஓடுபவர்கள் மலைப்பிரதேசங்களிலிருந்து கீழ் நோக்கி வரும்போது நியூட்ரலில் வாகனத்தை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். எரிபொருளை மீதப்படுத்த இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுக்கின்றனர் இது ஒரு பாரதூரமான ஆபத்தான பயணமுறை என்பதை சாரதிகள் உணர்வதில்லை.
பள்ளத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வாகனம் கியர் இன்றி நியூட்ரலில் சென்றால் சாதாரண எஞ்சின் உந்துதலை விடவும் அதிக உந்துதலை கொண்டிருக்கும் அந்த உந்துதலை சமாளித்து வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பிரேக் மாத்திரமே உதவியாக இருக்கும். இயந்திரத்தில் இருந்து கியர் தொடர்பு துண்டிக்கப்பட்ட வாகனம் கட்டறுத்த காட்டெருமை போலாகிவிடும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது எஞ்சினேயொழிய பிரேக் இல்லை என்பதை பல சாரதிகள் உணர்வதில்லை.
உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி வாகனம் ஒடும்போது எப்போதும் Low கியரில் பயணிப்பதே மிகவும் பாதுகாப்பானது. ரொப் கியர் வாகனமாக இருப்பின் 3th கியரில் பயணிப்பது பாதுகாப்பானது ஹை கியர் வாகனமாக இருப்பின் ரொப் கியரில் பயணிப்பது பாதுகாப்பானது இது முழுக்க முழுக்க வாகனம் இயந்திர கட்டுப்பாட்டில் இருக்கும் நீங்கள் பிரேக் பாவிக்க சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கும். எரிபொருளை மிச்சம் பிடிக்கிறோம் என்ற பெயரில் High கியரிலோ நியூட்ரலிலோ பயணித்தால் விலைமதிப்பற்ற உயிருக்கு உத்தரவாதம் இருக்காது.
உயர் நிலத்தில் இருந்து தாழ் நிலம் நோக்கி வாகனங்கள் ஓடும்போது வேகத்தை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக பிரேக்கினை அழுத்தும் செயற்பாட்டில்தான் அனேக சாரதிகள் ஈடுபடுகின்றனர். பிரேக் சூ என்பது இரும்பினால் ஆன பொருள் இல்லை அது தேயக்கூடிய பேப்பர் கலவையினால் ஆனது. அதிக அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது அது எரிந்துபோய்விடும். பிரேக் பிடிக்க பிரேக் சூ எரியும் நாற்றத்தோடும் ரிம்கள் சூடாகி புகை பறக்கவும் விரைந்துசெல்லும் வாகனங்களின் பிரேக் எந்நேரத்திலும் செயலிழந்து போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எல்ல விபத்தில் சிக்கிய இந்த பேருந்துக்கும் அதுதான் நிகழ்ந்துள்ளது. சாரதி நியூட்ரலில் அல்லது ரொப் கியரில் பயணித்துள்ளார் முழுக்க முழுக்க வாகனம் பிரேக்கின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது தொடர்ச்சியாக பிரேக்கினை அழுத்தி வளைவுகளில் வேகத்தை குறைத்துக்கொண்டு வர பிரேக் சூ முற்றாக எரிந்துபோயிருக்கிறது. ஈற்றில் கைவிட்டு விட்டது. கட்டறுத்த காட்டெருமையாய் பள்ளத்தை நோக்கி பாய்ந்து பலியெடுத்திருக்கிறது.
மலைப்பிரதேசங்களில் நியூட்ரலில் பயணிக்க வேண்டாம் என வீதியோரங்களில் அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட்டும் இருக்கிறது அதை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. சில உயர் மலைப்பகுதிகளை கொண்ட நாடுகளில் கீழ்நோக்கி பயணிக்கும் போது நீங்கள் எத்தனையாவது கியரில் பயணிக்கவேண்டும் எனவும் கூட அறிவித்தல் பலகை வைத்திருப்பார்கள் அதை விடுத்து பிரேக்கை பிடித்து பிடித்து உயர் நிலை கியரில் சென்றால் நடுவழியில் பிரேக் பெயிலியர் ஆகி நிற்கவேண்டிவரும் அல்லது பள்ளத்தில் பாய்ந்து படுகொலையாகவேண்டிவரும்.
குறிப்பாக ஒயில் மூலம் பிரேக் சிஸ்டம் இயங்கும் வாகனங்கள் மலைப்பகுதிகளில் கீழ் நோக்கி பயணிக்கும் போது கியர்களில் வராது பிரேக்கில் வந்தால் மிக குறுகிய காலத்தில் பிரேக் லெதர்கள் சூடாகி எரிந்தோ அல்லது பிரேக் சூக்கள் எரிந்து பிரேக் பம் பிஸ்டன்கள் வெளியேறி ஒயில் ஓடியோ பிரேக் செயலிழந்துபோக வாய்ப்புக்கள் அதிகம்.
Air மூலம் பிரேக் சிஸ்டம் வேலை செய்யும் வாகனங்கள் கொஞ்சம் பாதுகாப்பானது ஏதேனும் சந்தர்ப்பங்களில் பைப்புக்கள் வெடித்தோ வேறு வழியிலோ ஏர் வெளியேறினால் தானாகவே கேன்பிரேக் ஓப்பன் ஆகிவிடும் வாகனம் பிரேக் ஆகி நின்றுவிடும். ஆனால் தொடர்ச்சியாக பிரெக் பிடித்ததன் மூலம் பிரேக் சூ எரிந்துபோயிருந்தால் பிரேக் பிடித்தாலும் பிடிபடாது. எல்ல பஸ் பள்ளத்தில் பாய்ந்தமைக்கும் இதுவே காரணம். சாரதியின் முறையாற்ற நடத்தையே அவரையும் பலிகொண்டு மேலும் 14 பேரையும் காவு கொண்டிருக்கிறது.
சு.பிரபா
0 comments:
Post a Comment