சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து சென்ற சில மணிநேரத்தில் இடம்பெற்ற அராஜகத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிசாரின் செயல்பாடுகளை காணொளி பதிவு செய்து சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தினால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இது இவ்வாறு இருக்கையில் பதில் பொலிஸ் மா அதிபர் சுன்னாகத்திற்கு வருகை தந்து புதிய பொலிஸ் நிலையத்தினை திறந்து வைத்துவிட்டு சென்று சில மணி நேரத்தில், அவரது சுற்றறிக்கையை மீறி அராஜகம் இடம்பெற்றுள்ளது.
சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தின் பெயர் எழுதப்பட்ட முச்சக்கர வண்டியில் வந்த பொலிசாரினால் தாக்குதல் நடாத்தப்பட்டவேளை, அந்த தாக்குதலை காணொளி பதிவு செய்த ஆசிரியரின் கைப்பேசியை பொலிஸார் பறித்து சென்றனர்.
பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரம் அவர் இவ்வாறு காணொளி பதிவு செய்துள்ளார். இது இவ்வாறு இருக்கையிலேயே பொலிஸாரின் அராஜகம் இடம்பெற்றுள்ளது.. இதுவரை அந்த கைப்பேசி கொடுக்கப்படவுமில்லை.
இந்தப் பிரச்சனைக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ஆசிரியரது கைப்பேசி கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் இந்த சம்பவத்தை மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment