வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போதே ஆளுநர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.
அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதேவேளை, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது பல வெள்ள வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.
அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு இந்த விடயங்கள் அனைத்தும் சீராக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, வெள்ளம் வடிந்தோடிய பின்னர் கிணறுகளுக்கு குளோரின் இடுவதற்குரிய ஆயத்தங்கள் சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேவேளை நோய் நிலைமைகள் தொடர்பில் கண்காணிப்பதற்குரிய ஏற்பாடுகளும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரியப்படுத்தினார்.
தொடர் மழை காரணமாக பெருமளவு பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும், வெள்ளம் இன்னமும் வழிந்தோடாமல் இருப்பதால் பயிர் அழிவு தொடர்பில் சரியான மதிப்பீட்டை தற்போது முன்னெடுக்க முடியாது இருப்பதாகவும் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment