பரந்தன் சந்தியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து நடந்தது என்ன?நொடிப்பொழுது இழைக்கும் தவறு வாழ்வில் நீங்காத வடுக்களைத் தந்துவிடுகிறது
மேகங்கள் அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருக்க சூரியன் தன் பிஞ்சுக்கரங்களை நீட்டிக்கொண்டு மெல்ல எழுந்தான். அன்றைய நாள் விடியல் எல்லோருக்கும் நல்லதாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும், அவ்வாறு தான் யதுகிரியின் எண்ணங்களும். வழமைபோல் தன் கனவுகளுடன் பல எண்ணங்கள் அவளது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க புறப்பட்டாள் யதுகிரி கனவாலும் நினைத்திருக்க மாட்டாள் இன்றுதான் தன் கடைசி நாள் என்று. வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தவளை காலனவன் டிப்பர் வடிவில் வந்து பறித்தெடுத்தான் அவள் உயிரிழந்த செய்திகேட்டு பதறிய தாய் உள்ளம் கதறியபடி ஓடினாள் காலனை விரட்டி மகளின் உயிரை பறிக்க கிணற்றடிக்கு. அவரின் தாய்ப்பாசம் சொல்கிறது யதுகிரியின் வளர்ப்பைப் பற்றி
கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை அன்னையின் மொத்த அழகையும் தனக்குள் வைத்துள்ளது பரந்தன் எனும் அழகு தேவதை. அவ்வாறான எழில் கொஞ்சும் அழகிய பரந்தனின் குமரபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் ஐயாவினுடைய மகளின் இறப்புச் செய்தி கேட்டு அவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை, வீதியோரமாக ஒரு வயோதிபர் நடந்து செல்வதைக் கண்டு எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். ஏனென்றால் எனக்கு வீடு இருக்கும் இடம் சரியாக தெரியாது அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என ஐயா நேற்று பரந்தன் சந்தியில் டிப்பர் அடிச்சு செத்த பிள்ளையின்ட வீடு எவடத்த எண்டு கேட்ட போது கலங்கிய கண்களோடு என்னை நிமிர்ந்து பார்த்தார். நானும் அங்குதான் செல்கின்றேன் என்று தன்னிலை மறந்து கதைகூற ஆரம்பித்தார். அவர் நிலைகண்டு என்னை மறந்த நான் மோட்டார் சைக்கிளில் வந்ததை மறந்து அவருடன் நடந்தேன். அப்போது அவர்மெதுவாக என்னிடம் கேட்டார் தம்பி செத்த பிள்ளைய உனக்கு தெரியுமோ என்று. இல்லை ஐயா நான் அவருடைய உறவினர் உடைய பழக்கத்தில் தான் அங்கு செல்கின்றேன் என்று கூறினேன்.
என்ன வாழ்க்கை அப்பு இது சாகும் வயதில் நானிருக்கின்றேன் வாழும் வயதில் யதுகிரி என்று மௌனமாக அவரது கண்கள் கண்ணீர் சொரிந்தன. அப்பன் இந்த 96ஆம் ஆண்டு இடம்பெயர்வில் இங்க இருந்து போய் வன்னியில இருக்கேக்க தான் இவள் பிறந்தவள். நான் நினைக்கிறேன் சந்திரசேகரனின்ட நான்காவது பிள்ளை 1996ஆம் ஆண்டு இவள் பிறந்து நான்கு வயது மட்டும்நடக்கவே மாட்டாள். அதுகள் வேண்டாத தெய்வம் இல்ல. நான்கு வயதுக்கு பிறகுதான் மெது மெதுவா நடக்கத் தொடங்கினாள் பிறகு இப்படியே 2002 ஆம் ஆண்டு இங்க வந்திட்டினம்.
நல்ல கெட்டிக்காரி விளையாட்டிலும்
சரி. படிப்பிலும் சரி பிறருக்கு உதவி செய்வதிலும் ஒரு வித்தியாசமானவள். இவளின் அளவில் யாரையும் நான் பாத்ததில்லை எல்லோருக்கும் அன்பை சரிசமமாக காட்டுபவள் சாப்பாட்டைத்தான் எள்ளானாலும் ஏழாப் பிரி’ என்பாள் இவள் காட்டும் கருணை, அன்பு. பாசம் யாவுமே சமனாக தான் இருக்கும் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே வீட்டிற்கு வந்துவிட்டோம். வீட்டிலிருந்து 100m தூரமளவு வரை பனர்கள் இருபுறமும் எனக்கு முதியவர் சொன்னதிற்கும் இதனை பார்த்ததிற்கும் தூக்கி வாரிப் போட்டது இப்படி ஒரு பிள்ளையா என்று அத்தனையும் உண்மை என உணரும் தருணமாக வானம் சிறுக சிறுக மழைத்துளிகளை பொழிந்தது. அந்த மழைத்துளிகள்பனர்களில் பட்டு கண்ணீர் சிந்துவது போல சிந்தின. அத்தனையும் பார்த்த நான் யதுகிரியின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்கக் கூடாது கடவுளே என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன்.
உள்ளே சென்றதும் யதுகிரியின் உடலுக்கு அருகில் தாயவள் அழுதுகொண்டிருந்தாள். எனக்கொரு வருத்தம் என்றால் என்னை பெற்றவள் போல் நான் பெற்ற செல்லம் என்னை பார்த்தாளே அவள் இங்கு மூச்சு பேச்சின்றி கிடக்கின்றாள் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. என் பிள்ளைக்கு சொந்த பந்தம் கூட்டி கல்யாணம் செய்ய ஆசைப்பட்டேன். கடைசியில் அவளது இறுதி ஊர்வலத்திற்கு எல்லோரையும் வரும்படியாக செய்துவிட்டதே விதி. சிறுவயதில் இருந்து பெருமையும் பேரும் வாங்கித்தந்த என் பிள்ளைக்கு கல்யாண மாலை போட முடியாமல் போய்விட்டதே என்பிள்ளைக்கு என்கையால் கருமாரிக்கு
மாலையிட வைத்துவிட்டாயே என புலம்பிய புலம்பல் எல்லோரதும் கண்களிலும் கண்ணீர் ஆறாக பாய்ந்தது. அந்த தாயின் அழுகுரல் எல்லோரது மனதையும் கண்ணாடி போல் சுக்குநூறாக உடைத்துவிட்டது.
அப்படியே போய் ஒரு ஓரமாக இருந்தேன் யாரைப் பார்த்தாலும் யதுகிரி அப்படி செய்தாள்.இப்படி செய்தாள் என்று. யதுகிரி இறந்து கிடக்கிறாள் என்பதை மறக்கும் அளவில் கதைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது யதுகிரியின் உறவினர் ஒருவர் பக்கத்தில் இருந்தவருக்கு கூறிக்கொண்டிருந்தார். யதுகிரி சிறு வயதிலிருந்து விளையாட்டிலும் சரி மற்றும் கலைகள் எல்லாவற்றிலும் சிறந்தவள். விளையாட்டு என்றால் முதலிடம் யதுகிரி. அதே போல் பாடசாலையில் ஏதும் நிகழ்வாக இருந்தாலும் விழாவாக இருந்தாலும் சரி யதுகிரியின் நிகழ்வு இருக்கும். அவள் இல்லாத நிகழ்வு இருக்காது. அவளின் திறமை எல்லாவற்றிலும் புறம்பானது அவளுக்கு அந்த திறன் பிறக்கும் போதே கடவுள்கொடுத்தவரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறு பறவைகள்.மரம்,செடிகள் என இயற்கையின் அழகை இரசிப்பதிலும் அவளைப்போல் யாரும் இல்லை. அவளின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இத்தனைக்கும் அவள் ஒரு பட்டதாரி கிழக்கு பல்கலைக்கழகம் சென்று பட்டபடிப்பு முடித்தவள். படித்து முடிய அரச வேலை கிடைக்கும் வரை தாமதிக்காமல் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துகொண்டிருக்கிறாள். அங்கு செல்லும்போது தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று அவளை நினைத்து குமுறி அழுதார். அவரைச் சுற்றியுள்ள வர்கள் சமாதானம் செய்தனர்.
அவரைச் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது எனக்கு பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். நான் எதர்ச்சியாக அவரின் முகத்தைப் பார்த்தேன்.எனது நிறுவனத்தில் தான் யதுகிரி வேலை செய்கிறாள். எனது அனுபவத்தில் இப்படி ஒரு பிள்ளையை பார்த்ததில்லை அவரின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்து நான் வேலையை விடப்போகிறேன் என்றாள். ஏன் என்று கேட்டேன் என் அம்மாவிற்கு கண் ஒப்ரேசன் செய்திருக்கு. நான் தான் அவரைப் பார்க்கவேண்டும் எனக்கு அம்மாவிற்கு பிறகு தான் எல்லாமே என்று கூறினாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் அவளின் திறமை,அவளின் ஆர்வம். வேலையில்
காட்டும் பற்றுணவர்வு இதுவரை யாரிலும் பார்த்தில்லை. அதனால் நீ வேலையை விட வேண்டாம் எத்தனை நாள் வேண்டுமானாலும் லீவு எடுத்துக்கொள் அம்ம்மாவிற்கு சுகமானதும் வேலைக்கு வா என்று கூறி அனுப்பினேன் எனக்கூறி அழுதார்.
இவ்வாறு ஒவ்வொருவராக யதுகிரியின் ஒவ்வொரு விடயங்களை புலம்பிக்கொண்டிருந்த போது கிளி/பரந்தன் இந்துக்கல்லூரி முதல்வர் கண்ணீர் அஞ்சலி உரை ஆற்றினார். அவர் உரை ஆற்றும் முன்பே அவரது கண்ணில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்திருந்தன. அவர் சொன்ன விடயங்கள் எல்லோரும் சொன்னதையும் கேட்டவையாக இருந்தாலும் திகட்டாதவையாக கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். அப்போது அவர் ஒரு விடயம் சொன்னார். நான் ஒருநாள் யதுகிரியிடம் உனக்கு யதுகிரி என பெயர் வைத்தது யார் எனக் கேட்டேன். அதற்கு அவள் கர்வமாகவும் விளையாட்டாகவும் பதிலளித்தாள். என் அப்பாதான் வைத்தார் என்றாள் யதுகிரி. யதுகிரி என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு? பாரதிக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசான் தான் சேர் யதுகிரி. அவரின் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்துள்ளார் என்றாள். அவள் கூறியது முற்றிலும் உண்மை அந்த பெயர் அவளுக்கு அவ்வளவு பொருத்தம் எனக்கலங்கினார்.
இங்கு நடைபெறும் ஒவ்வொரு விடயமும் எனக்குள் பல எண்ணங்களை எழுப்பின. ஒரு சாதாரண பெண்அவள். அவள் வாழ்ந்த வாழ்க்கை எல்லோர் மனதிலும் இப்படி இடம்பிடித்திருக்கின்றதே. கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரி, அதோடு ஒரு புகைப்பட கலைஞர். இலக்கிய வாதியாகவும் இருக்கிறாள். அதோடு ஊர்மக்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவளாக இருக்கிறாள். வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறந்த வழிகாட்டி ஒரு தந்தைக்கு ஒப்பாகப் பார்க்கப் படுகிறாள். ஒரு மனிதரால் இத்தனை யாகவும் எவ்வாறு இருக்க முடியும். இந்த சிறுவயதில் இயற்கை கூட விடை பெறமுடியாமல் தன் வருத்தம் தெரிவிக்கும் முகமாக மழைத்துளியாக தன் கண்ணீர் பூக்களை தெளிக்கின்றது.
இவ்வாறு வாழ வேண்டிய பிள்ளைகள் பலரின் உயிரை சர்வசாதாரணமாக எடுத்துவிடுகிறது வீதி விபத்து என்ற அரக்கன்.
சட்டங்கள் இறுக்கமடைந்தால் தவறுகள் குறைக்கப்படும் என்று கூறுவார்கள். வீதி விபத்தென்பது சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்படுவது.
ஒரு சாரதியின் சிறு கவனயீனம்ஒரு உயிரையே எடுக்கிறது எனின் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது அதிகளவான விபத்துக்கள் டிப்பர் போன்ற கனரக வாகனங்களால் நடைபெறுகின்றன.
எனவே வீதி விதிகளில் டிப்பர் போன்ற கனரக வாகனங்களின் மீதான சட்டங்கள் இறுக்க வேண்டும் இல்லையேல் இன்னும் பல யதுகிரிகளை எம் சமூகம் இழக்க வேண்டிவரும்.
கிளி குமார்