இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டது எப்படி ?பொலிஸார் வெளிப்படுத்திய முக்கிய விடயங்கள்...
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய "கணேமுல்ல சஞ்சீவ" கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என்பவர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்று நேபாளத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், சர்வதேச மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று செவ்வந்தியும் அவருடன் கைது செய்யப்பட்ட ஐவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது புகைப்படங்கள் முதற்தடவையாக பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.
இவரைக் கைது செய்த முறை மற்றும் இவர் தப்பிச் சென்ற விதம் குறித்த தகவல்களைப் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
நேபாளத்தில் 3 நாட்கள் தேடுதல் வேட்டை
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், நேபாள அரசாங்கத்தின் உதவியுடன், இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேசப் பொலிஸார் (Interpol) இணைந்து மேற்கொண்ட மூன்று நாட்கள் நீடித்த விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார்.
படகு மூலம் இந்தியா, பின்னர் ரயில் மூலம் நேபாளம்
பொலிஸ் விசாரணையில் இஷாரா செவ்வந்தியின் தப்பித்தல் திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:
இவர், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “ஜேகே பாய்” என்பவரின் உதவியுடன், படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தியாவிலிருந்து ரயில் மூலம் நேபாளத்தை அடைந்துள்ளார்.
நேபாளத்தில் போலி அடையாளங்களுடன் ஒரு சொகுசு வாடகை வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார்.
துப்பு கொடுத்தவர்: “கெஹெல்பத்தர பத்மே”
இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த இடம் குறித்த முக்கியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்தது குறித்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன.
போலி கடவுச்சீட்டில் ஐரோப்பா தப்பிக்கும் திட்டம்
இலங்கை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், விசேட பொலிஸ் குழு ஒன்று நேபாளத்திற்கு விரைந்து இந்தக் கைது நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
மேலும் வெளியான தகவல்கள்:
இஷாரா செவ்வந்தியுடன் சேர்ந்து, அவருக்கு உதவியாக இருந்த ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி ஒரு யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து, அதன் மூலம் ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இடம்பெற்ற இந்தப் பகிரங்கக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சர்வதேசக் கைது நடவடிக்கை, பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான பொலிஸாரின் தேடுதல் வேட்டைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment