சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
1988 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நான் சித்தியடைந்த சந்தோசத்தில், தனது வியாபார நடவடிக்கைக்காக அடிக்கடி கண்டி சென்று வரும் அப்பா, என்னையும் அங்கு கூட்டிச் சென்றார். மாலை 5 மணியளவில் கண்டியை அண்மித்துக் கொண்டிருந்த பஸ் திடீரென நின்றது. நடுத்தெருவில் தீ மூட்டி ஏதோ எரிந்துகொண்டிருந்தது. பலர் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர். அப்பாவும் பதற்றமானார். ஆனால் அப்பா பஸ்சை விட்டு இறங்கவில்லை. என்ன நடக்கின்றது என்று நினைப்பதற்குள் ரீசேட், ஜம்பர் போன்ற சிவில் உடையிலும் பாதுகாப்புத்தரப்பின் சீருடையுடனும் ஆயுதம் தரித்த பலர் பஸ்சுக்குள் மளமள என்று ஏறினார்கள். அனைவரையும் பரிசோதித்தனர். அப்பாவையும் என்னையும் பரிசோதிக்கவில்லை. நாங்கள் இந்துத் தமிழர்களின் அடையாளமான வீபூதி, பொட்டு, கையில் நுால் கட்டியிருந்ததே காரணம் என அப்பா கூறினார். சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டது.
துாரத்தில் நடுத்தெருவில் எரிந்து கொண்டிருந்த அந்த தீயை விலத்தி பஸ் சென்ற போது எட்டி தெருவைப் பார்த்தேன். தலைகள் எல்லாவற்றையும் ஒன்றாக இருக்குமாறு மனித உடல்களை எதிரெதிரே அடுக்கி தலைகளுக்கு மட்டும் ரயர் போட்டு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சியுற்றேன். அப்பாவிடம் விடுத்து விடுத்து கேட்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு ஜே.வி.பி என்பவர்கள் யார்? ஏன் அவர்களை இலங்கை அரசாங்கம் கொன்று குவிக்கின்றது என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன்.
தென்பகுதி சிங்களவர்களிடத்தில் அந்தக்காலத்தில் எமது பிரதேசத்தில் நிலைத்து நின்ற இயக்கம் போல் ஒரு இயக்கம் உருவாகியிருந்தது. அந்த இயக்கமே ஜே.வி.பி என்பதை நான் அப்போதே அறிந்து கொண்டேன். தென்பகுதியில் மக்களின் செல்வாக்குடன் கூடிய நிழல் அரசாங்கத்தை ஜே.வி.பியினர் இயங்கி வந்துள்ளார். நாளுக்கு நாள் அவர்களின் ஆளுமை அதிகரித்து வந்த போதும் அவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் தம்மை எதிர்த்தவர்களை ஆயுதங்கள் மூலம் கொலை செய்துள்ளனர். இவற்றையெல்லாம் பொறுக்கமுடியாத இலங்கையின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா இராணுவ பலத்தால் அழித்து ஒழித்தார். அதாவது ஜே.வி.பியினர் மயிர்கொட்டிகள் போல் எரிக்கப்பட்டார்கள்.
லொறிகளில் பல இடங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சடலங்கள் இரவிரவாக கண்டி மயானத்தில் வைத்து எரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக நானும் அப்பாவும் தங்கியிருந்த தமிழ் வர்த்தகர் வீட்டில் இருந்த வர்த்தகர் எமக்கு கூறினார். இது எனது கண் முன்னே நடந்த பயங்கர சம்பவம்.
அதன் பின்னர், ஜே.வி.பியினரின் 1971ம் ஆண்டு கலகம் உட்பட்ட பல நிழல் அரசு செயற்பாடுகளையும், அவர்களை அப்போதைய சிறீமா அரசு எ்வ்வாறு வெளிநாட்டு படைகளின் உதவியுடன் ஒடுக்கியது என்பது தொடர்பாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் புத்தகங்கள் மூலமாகவும் வாசித்து அறிந்து கொண்டேன். 1971ம் ஆண்டு மற்றும் 1988 ம் ஆண்டு காலப்பகுதியில் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான தென்பகுதி இளைஞர் யுவதிகள் அரச தரப்பாலும் கலகக்ககாரர்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகள் ஜே.வி.பி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் ஏதும் இன்றி கொன்று எரிக்கப்பட்டனர்.
நான் வாசித்த புத்தகம் ஒன்றில் 1988ம் ஆண்டு காலப்பகுதியில் பிடிபட்ட ஜே.வி.பி சந்தேகநபர்களை துப்பாக்கி குண்டை பயன்படுத்தி சுட்டால் செலவு அதிகமாகும் என்பதால் அவர்களின் காதுக்குள் ஆணியை வைத்து அடித்துக் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் மிகக் கொடூரமான முறையில் ஜே.வி.பியினா் அந்தக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டனர் என்பது உண்மை. முள்ளிவாய்க்கால் அவலத்தை விட பேரவலம் அந்தக்காலத்தில் தென்னிலங்கையில் நடந்து முடிந்திருந்தது.
சீன சார்பு கம்கம்யூனிஸ்ட் கொள்கையுடன் கூடிய ஜே.வி.பி கட்சியை நிறுவிய ரோகண விஜயவீர 1989ம் ஆண்டு கொல்லப்படும் போது அவருக்கு வயது 46. அவர் இறந்த பின்னரும் நீறு பூத்த நெருப்பாக குறித்த கட்சியின் கொள்கைகளுடன் ஜே.வி.பி மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்து அதன் பின்னர் இலங்கை அரசியலுக்குள் 1992ம் ஆண்டு காலப்பகுதியில் பிரவேசித்து தற்போது குறித்த கட்சியிலிருந்து வந்த அனுரா ஜனாதிபதியாகவும் வந்துள்ளார்.
ரோகண விஜயவீர கொல்லப்பட்ட போது தற்போதய ஜனாதிபதி அனுராவுக்கு 1989ம் ஆண்டு காலப்பகுதியில் 21 வயது. எனக்கு 11 வயது. அந்தநேரம் அனுரா ஜே.வி.பியில் இருந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பாக குறித்த ஜே.வி.பி கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த சோமவன்ச அமரசிங்க என்பவர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த போதும், வடக்கு, கிழக்கு மாகாணத்தை பிரித்த போதும், அனுரா எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் அறிய முடியவில்லை. ஆனால் அனுரா ஜே.வி.பி தலைவராக பொறுப்பேற்ற பின் குறித்த கட்சி கொள்கைகளை மீறி செயற்படுகின்றது என்று கூறி முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்க கட்சியை விட்டு விலகினார்.
இலங்கை அரசால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு போராட்ட அமைப்பின் தலைவர் தற்போது அதே அரசாங்கத்தின் ஜனாதிபதியாக சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழர் பிரதேசத்தில் இலங்கை அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு போராட்ட குழுவில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் என்ன செய்கின்றார்கள்?.
கோயில் யானையை வைத்து பிழைப்பு நடாத்துவது போல் வடக்கு கிழக்கில் செயற்படும் அரசியல்வாதிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் குறித்த குறித்த போராட்ட குழுவில் தப்பிப் பிழைத்தவர்களை வைத்து பிழைப்பு நடாத்துகின்றார்கள். கோயில் யானைகளும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக அவர்களுக்கு சலாம் போட்டு தமக்கான தீனியை பெறுவதில் மட்டும் குறியாக திரிகின்றன.
சாராய பார்களுக்காகவும், காசு,பண டீல்களுக்காகவும், தமது சுகபோக வாழ்வுக்காகவும் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து தமிழ் இனைத்தை விற்று பிழைப்பு நடாத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்தக் கோயில் யானைகள் காலம் காலமாக சேவகம் புரியும்.
0 comments:
Post a Comment