யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸாரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும் மந்திகை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன்எனும் நபர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தாக்குதலுக்கு இலக்கான நபர் வசிக்கும் வீடு தொடர்பில் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக பிரச்சனை நிலவி வந்துள்ளது.
அந்நிலையில் மற்றைய தரப்பினர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டை அடுத்து குறித்த நபரை பொலிஸ் நிலையம் அழைத்த பொலிஸார் , அங்கு வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாரினால் அச்சறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பின்னர் அவர் வீடு திரும்பி சில மணி நேரத்திற்குள் வீட்டிற்கு வந்த பொலிஸார் , அவரின் உடமைகளை வீட்டின் வெளியே எடுத்து எறிந்து , வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
பொலிசாரின் அத்துமீறல்கள் தொடர்பில் காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்ட பின்னர் வீடு திரும்பி சில மணி நேரத்திற்குள் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டு , அவரை கத்தியால் பல தடவைகள் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தவரை அயலவர்கள் மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.4 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்த தன்னை தாக்கி வயிற்றில் கத்தியால் குத்தி தப்பிச் சென்றுள்ளதாகவும், அதில் ஒருவரை தனக்கு தெரியும் எனவும் பொலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment