கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50 பேர் பலியான சம்பவத்திற்கு நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மனதை நடுங்கச் செய்கிறது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயத்திற்கு 50 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் விஜய், விஷால், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் இச்சம்பவம் குறித்து வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது'' என தெரிவித்துள்ளார்.
ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்
மேலும் அவரது அறிக்கையில், ''அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்க முடியும்.
குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையில், மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்.
இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிராத்தனை. இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்.!!'' என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment