கனடாவுக்கு சமீபத்தில் வந்த இந்திய இளைஞர் ஒருவர், அசாதாரண விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அசாதாரண விபத்து
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர் தங்கியுள்ளார்கள். அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர்.
கடந்த செவ்வாயன்று அதிகாலை 7.35 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எரிவாயுக் கசிவு என்று நினைத்து அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைந்த நிலையில், அங்கு கார்பன் மோனாக்சைடு வாயுவால் அந்த வீட்டில் வசித்துவந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால், அவர்களில் 25 வயதான இந்திய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மற்ற ஆறு பேரும் சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வொருவராக வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
புதிதாக கனடாவுக்கு வந்தவர்கள்
அந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் சமீபத்தில் கனடாவுக்கு படிக்கவும், பணி செய்யவும் வந்தவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு கார்பன் மோனாக்சைடு விஷம் குறித்து தெரியவில்லை.
சம்பவம் நடந்த வீட்டிலோ, கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவைக் காட்டும் அலாரம் இல்லையாம். அந்த வீட்டிலுள்ள கார் நிறுத்தும் கேரேஜில், கார் ஒன்றின் எஞ்சின் இயங்கியவண்ணம் இருந்துள்ளது.
அந்த காரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடே அந்த இளைஞரின் உயிரைப் பறித்துள்ளது. இந்நிலையில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு இந்த கார்பன் மோனாக்சைடு அலாரம் போன்ற விடயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என அப்பகுதியில் வாழும் சர்வதேச மாணவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உயிரிழந்த மாணவரின் பெயர், புகைப்படம் போன்ற எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment