வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட தரணிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியை கொடூரமாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் மீது திணைக்கள ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்று, மாணவியின் குடும்பத்தினரால் ஆசிரியருக்கு மன்னிப்பளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்தது.
க.பொ.த உயர்தரத்தில் கல்வ கற்கும் மாணவியொருவரே கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,
“பாதிக்கப்பட்ட மாணவி வகுப்பறையில் இருந்த போது, மற்றொரு மாணவியின் மூலம் ஆசிரியர் அழைத்துள்ளார். ஆசிரியர் அறைக்கு சென்ற போது, அங்கு குறிப்பிட்ட ஆசிரியர் செஸ் விளையாட்டிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் இருக்கும்படி ஆசிரியர் கூறியுள்ளார். ஏன் அழைத்தீர்கள் என மாணவி கேட்க, என்னைப்பற்றி என்ன கதைத்தாய் என ஆசிரியர் கேட்டுள்ளார். தான் அப்படியொன்றும் கதைக்கவில்லை, நீங்கள் சொன்னால்தான் என்ன விடயமென தெரியும் என மாணவி கூறியுள்ளார். என்ன எதிர்த்து கதைக்கிறாய் என திடீரென மாணவியை தாக்க ஆரம்பித்துள்ளார். பனம் மட்டையினால் மாணவியை தாக்கியுள்ளார். பனை மட்டை முறிந்ததும், மூங்கில் தடி வெட்டி வருமாறு மாணவர்களுக்கு பணித்துள்ளார். பச்சை மூங்கில் தடி வெட்டிக் கொண்டு வந்ததை கண்டதும், மாணவி பயத்துடன் அறை கதவை திறந்து கொண்டு தப்பியோடினார். ஆசிரியை ஒருவரை கட்டிப்பிடித்து உதவி கோரியுள்ளார்.
தாக்கிய ஆசிரியர் விரட்டிச் சென்று, அந்த ஆசிரியையும் பேசிவிட்டு, மாணவியை பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றுள்ளார். சக மாணவிகள் நியாயம் கேட்டபோது, அவர்களையும் பேசி அனுப்பியுள்ளார். மீண்டும் அடிக்க முயன்றபோது, அந்த அறையிலிருந்து தப்பியோடி வந்து விட்டார்.
மாணவி வீட்டுக்கு வந்து அறையை பூட்டி விட்டு, தான் தற்கொலை செய்யப் போவதாக கதறி அழுதார். நாங்கள் கோயிலுக்கு சென்று விட்டோம். உறவினர்கள் தகவல் தந்த பின்னரே வீட்டுக்கு சென்றோம்.
சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அறிவித்து, அவர்களின் அறிவுறுத்தலின்படி பொலிஸ் நிலையம் சென்றோம். பொலிசார் பரிசோதித்து மாணவியின் முதுகில் அடி காய தழும்புகள் இருப்பதை கண்டறிந்தனர். ஆசிரியரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்த போது, மாணவியை கடுமையாக அடிக்கவில்லை, 2 அடிதான் கையில் அடித்தேன், முதுகில் அடிக்கவில்லை என்றார்.
மாணவியை பரிசோதித்ததில் முதுகில் அடி காய தழும்புகள் இருப்பதை கண்டறிந்ததாக பெண் பொலிசார் தெரிவித்தனர்.
ஆசிரியர் பொய் சொல்வதாக பொலிசார் கடுமையாக விசாரிக்க ஆரம்பிக்க, கையில் அடித்த போது முதுகை காட்டியபடி மாணவி திரும்பியதாக ஆசிரியர் கூறினார்.
ஆசிரியருக்கு தக்க தண்டனையளிக்க வேண்டுமென மாணவி பொலிசாரிடம் கேட்டுக் கொண்டார். என்ன செய்யலாமென பொலிசார் எங்களிடம் கேட்டனர். நாங்கள் நீதிமன்றம், பொலிஸ் என சென்றதில்லை. எங்கள் பாடசாலை ஆசிரியர்தானே முதலாவது எச்சரிக்கை கொடுத்து, ஆசிரியருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டோம்“ என்றர்.
பொலிசார் இந்த விவகாரத்தை இரு தரப்பு இணக்கத்துடன் சமரசம் செய்தாலும், கல்வி திணைக்களம் ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளது.
குறிப்பிட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வலய கல்விப்பணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதன் அடிப்படையில், ஆசிரியர் எச்சரிக்கப்பட்டு, இடமாற்றம் வழங்கப்படுவார் என தொடர்புடைய கல்வித்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment