பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையே எக்கச்சக்கமாகிவிட்டது என பிரித்தானிய அமைச்சர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா சில கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய உள்ளது.
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி, இந்த மாற்றங்கள், அடுத்த வசந்த காலத்தில் அமுலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
1. பிரித்தானிய திறன்மிகு விசா பெறுவதற்கான ஊதிய வரம்பு உயர்வு
தற்போது, வெளிநாட்டவர் ஒருவர், பிரித்தானியாவில் பணி செய்ய, திறன்மிகுப் பணியாளர் விசா பெறவேண்டுமானால், அவரது ஊதியம் ஆண்டுக்கு 26,200 பவுண்டுகள் அல்லது ஒரு மணி நேரத்துக்கு 10.75 பவுண்டுகளாக இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது.
இனி அந்த தொகை, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
2. குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு அதிகரிப்பு
பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒரு வெளிநாட்டவர், தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை தன்னுடன் பிரித்தானியாவுக்கு அழைத்து வர விரும்பும் பட்சத்தில், அவரது குறைந்தபட்ச வருமானம் தற்போது ஆண்டொன்றிற்கு 18,600 பவுண்டுகளாக இருக்கவேண்டும் என்று உள்ளது, இனி 38,700 பவுண்டுகளாக இருக்கவேண்டும் என மாற்றம் செய்யப்பட உள்ளது.
3. குடும்பத்தினரை அழைத்து வர பராமரிப்புப் பணியாளர்களுக்குத் தடை
முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியைச் செய்யும் வெளிநாட்டு பராமரிப்புப் பணியாளர்கள், இனி தங்கள் கணவன் அல்லது மனைவியையோ, குழந்தைகளையோ பிரித்தானியாவுக்கு அழைத்து வர முடியாது.
4. பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காலியிடங்களில் பணியாற்றுவோருக்கான ஊதிய தள்ளுபடி இனி கிடையாது
பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காலியிடங்களை முதலாளிகள் எளிதாக நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, அத்தகைய பணி செய்ய வருவோருக்கான விசா பெற தகுதி பெற, 20 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இனி அது கிடையாது.
5. மருத்துவ உப கட்டணம்
மருத்துவமனைகளை பயன்படுத்துவதற்காக வருடாந்திர கட்டண விசா வைத்திருப்பவர்கள் செலுத்தும் மருத்துவ உப கட்டணம் 624 பவுண்டுகளிலிருந்து 1,035 பவுண்டுகளாக உயர உள்ளது.
6. பட்டதாரி விசா மீளாய்வு
ஒரு மாணவர் பிரித்தானியாவில் வெற்றிகரமாக படிப்பை முடித்த பிறகு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் நாட்டில் தங்குவதற்கு ஒரு பட்டதாரி விசா அனுமதியளிக்கிறது.
ஆனால், அந்த விசாவை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, அத்திட்டத்தை மீளாய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜனவரியில் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றங்கள், முதுகலை ஆராய்ச்சி படிப்பு படிப்பவர் தவிர்த்து, மற்ற சர்வதேச மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியா அழைத்து வருவதற்கான உரிமையை நீக்குகின்றன.
மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பு முடிவதற்குள் வேலை விசாவிற்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment