கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த 2 மாணவர்கள் போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இருவரும் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டவர்கள்.
கடந்த ஒரு வருடத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது. ஏனைய பீடங்களின் மணவர்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழக்கழக பீடமொன்றில் கல்வி பயிலும் மாணவர் குழுவொன்று தாம் தங்கியிருந்த விடுதியில் போதைப்பொருள் பாவித்த போது பொலிசாரால் கும்பலாக வளைத்து பிடிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, பேதைப்பாவனையாளர்கள் என்பது தெரிய வந்தது.
என்றாலும், அவர்கள் அடுத்த சில நாட்களில் பரீட்சையொன்றை முகம் கொடுக்கவுள்ளதாக, பல்கலைக்கழக பீடாதிபதியொருவரே உயரதிகாரிகளுடன் பேசி, அவர்களை தளர்வான சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள வைத்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மாணவர்களை பல்கலைக்கழக மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்துவதில்லை, அவர்கள் பொலிசாரின் சட்ட நடவடிக்கையை மட்டுமே எதிர்கொள்வார்கள் என பல்கலைக்கழகம் தற்போது முடிவு செய்துள்ளது. யாழ் பல்கலைகழக்கத்தின் இந்த முடிவும், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு முக்கிய காரணமென ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
போதைப்பொருள் பாவனை போன்ற முக்கிய விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் போதிய நடவடிக்கையெடுக்கவில்லையென்ற விமர்சனம் வலுத்து வருகிறது.
இந்த பின்னணியில், யாழ்ப்பாண பல்கலைகழக்கழத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்ற குழுவில் ஒருவர் அரைக்காற்சட்டை அணிந்து வந்தார் என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. அரைக்காற்சட்டையுடன் உள்நுழைவதற்கு என்ன தடையென பெண்ணொருவர் வினவுவதும், பாதுகாவலர்கள் முரட்டுத்தமாக பதிலளிப்பதும், கலாச்சாரம் காப்பாற்றப்பட்டதாக சமூக ஊடகவாசிகள் புளகாங்கிதப்பட்டு அதை பகிர்ந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை,
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக மாணவிகள் குற்றம்சுமத்தியதன் அடிப்படையில், இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. பல வருடங்களாக இந்த விவகாரம் நீடித்து வருகிறது. அந்த பேராசிரியர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்பித்தலில் ஈடுபடாமலேயே வருடக்கணக்காக மாதாந்தம் இலட்சக்கணக்கான சம்பளம் பெற்று வருகிறார். இந்த விவகாரம் சில காலத்தின் முன் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டு விசாரணை நடந்தது.
கலாச்சாரம் தொடர்பில் கவனம் கொள்ள வேண்டிய- குரல் கொடுக்க வேண்டிய வேறு விடயங்கள் இருக்கின்ற போது, சமூக ஊடகவாசிகளும் மேலோட்டமான- கும்பல் மனநிலை பார்வையில் இருப்பது தமிழ் சமூகத்தின் பலவீனமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment