புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது.
புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மக்களால் வழங்கப்பட்ட பணத்தை அந்த வங்கிகளில் இருந்து மோசடியான முறையில் பெற்றுக்கொள்வது நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி, கடுவெல பகுதியைச் சேர்ந்த புற்று நோயாளர் ஒருவரின், அரச வங்கியொன்றில் அவரது கணக்கில் நன்கொடையாகப் பெறப்பட்டிருந்த 3.8 மில்லியன் ரூபாய் இனந்தெரியாத நபர்களால் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கைது செய்வதற்கான நடவடிக்கைகள்
அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், புற்று நோயாளிகள் இணையத்தில் பணம் கேட்டு செய்யும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மோசடியாளர்கள், அந்த புற்றுநோயாளிகளுக்கான நிதி நன்மைகளை வசூலிப்பதாகக் கூறி, அந்த நோயாளிகளின் வங்கிக் கணக்கு எண்கள், தேசிய அடையாள அட்டை எண்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து கடுவெல புற்றுநோயாளியிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment