யாழில் குடும்பப் பெண்ணொருவர் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் காதல் விவகாரம் இருந்தது தெரிய வந்துள்ளது. பெண்ணை எரிந்தவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், குருநகர், கொஞ்செஞ்சி மாதா சவக்காலையில் நேற்று (1) மாலை இந்த கொடூர சம்பவம் நடந்தது.
சாவகச்சேரி, மட்டுவில் கிழக்கை சேர்ந்த இரத்தினவடிவேல் பவானி (45) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே கொல்லப்பட்டார்.
இந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் உள்ளார். 20 வயதான மற்றொரு மகனும், உயர்தரம் கற்கும் மகளும் உள்ளனர். கணவர் நீண்டகாலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக, தன்னை விட 5 வயது இளைய மற்றொரு ஆணுடன் பவானி நெருக்கமாக பழகி வந்துள்ளார். திருமணத்தை மீறிய இந்த உறவே, கொடூர கொலையில் முடிந்துள்ளது.
குருநகரை சேர்ந்த அந்த நபர், யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணிபுரிகிறார்.
தற்போது, 40 வயதாகும் அந்த நபர், திருமணம் செய்ய தயாராகி வருகிறார். இதனால், அவருக்கும், பவானிக்குமிடையில் தகராறு எழுந்துள்ளது.
தனது கள்ளக்காதலன் திருமணம் செய்யவுள்ள பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தனது நண்பியொருவர் மூலம், அந்தப் பெண்ணின் நடமாட்டங்களை பவானி கண்காணித்து வந்துள்ளார். அந்தப் பெண் வீட்டை விட்டு புறப்பட்டால், பவானிக்கு உடனடியாக நண்பி தகவல் வழங்குவார்.
இதையடுத்து, தனது காதலனை தொடர்பு கொள்ளும் பவானி, தொடர்ந்து நச்சரித்து வந்ததாக, கைதான நபர் தெரிவித்துள்ளார். பவானியின் நச்சரிப்பினால், தனது காதலியுடன் பொழுதை கழிக்க முடியாமல் திண்டாடிய அந்த நபர், பவானி மூலமாக தனது கள்ளக்காதல் விவகாரம், காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்றும் அச்சப்பட்டார்.
இதையடுத்து, பவானியை கொலை செய்து, தொல்லையிலிருந்து தப்பிக்க அந்த நபர் தீர்மானித்துள்ளார்.
கொலைக்கான திட்டங்களை வகுத்து விட்டு, பவானியை ஏமாற்றி அழைத்துள்ளார். காலம் உள்ளவரை பவானியுடன் சேர்ந்து வாழ்வேன் என, குருநகர், கொஞ்செஞ்சி மாதா சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட தனது தாயின் கல்லறையில் சத்தியம் செய்து, தனது காதலை நிரூபிப்பதாகவும், இதற்காக பவானியை வருமாறும் அழைத்துள்ளார்.
இதை நம்பிய பவானி நேற்று அங்கு வந்துள்ளார்.
சவக்காலையின் பின்புறமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள தனது தாயின் கல்லறைக்கு அண்மையில், ஒரு வகை நச்சுப் பொருளை (சமூக பொறுப்புணர்வு கருதி நஞ்சு பொருள் தொடர்பான மேலதிக விளக்கங்களை தவிர்த்துள்ளோம்) மறைத்து வைத்திருந்துள்ளார்.
பவானியை அந்த பகுதிக்கு அழைத்து சென்று, பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மறைத்து வைத்திருந்த நச்சு பொருளை பவானி மீது பிரயோகித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த பவானி நிலத்தில் விழுந்துள்ளார். அவர் செயலற்ற தன்மையில் இருந்த போது, மறைத்து வைத்திருந்த பெற்றோலை பவானியின் முகம், தலையில் ஊற்றி தீமூட்டினார்.
பவானியின் மீது அவர் பெற்றோலை ஊற்றிய போது, அது தவறி அருகிலுள்ள புல்களிலும் பரவியது. பவானியை தீமூட்டிய போது, அது புல்களிலும் பரவி புகை மேலெழுந்தது. பவானியின் சத்தம், புகையினால் சந்தேகமடைந்த சவக்காலைக்கு அருகிலிருந்த வீட்டுக்காரர்கள், சவக்காலைக்குள் எட்டிப்பார்த்த போது, பெண்ணொருவர் தீயில் எரிவதையும், தீமூட்டியவர் தப்பியோடுவதையும் கண்டனர்.
உடனடியாக செயற்பட்ட அவர்கள், பிரதேச மக்களின் உதவியுடன் தீயை அணைத்து, பவானியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அவர் முகம், தலை பகுதியில் கடுமையான காயமடைந்து, 85 வீத தீக்காயங்களுக்கு உள்ளாகி, புகையை சுவாசித்திருந்த காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment