கனடாவில், சாலை விபத்தொன்றில் மூன்று மாதக் குழந்தை உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று பலியான வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைக்க, பொலிஸார் மறுப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில், ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிஸார் துரத்த, அவர் வான் ஒன்றில் தப்பியோட, அவரது வான் மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருந்தது.
அந்த விபத்தில், காரில் பயணித்த, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தையும் பலியானார்கள்.
சிறப்பு விசாரணை
தங்கள் மகன், மருமகள் மற்றும் பேரனான மூன்று மாதக் குழந்தை பார்ப்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில் விபத்தில் இவர்கள் சிக்கி பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பான வழக்கை கனடாவின் சிறப்பு விசாரணைப்பிரிவு (Special Investigations Unit, SIU)
விசாரித்துவருகிறது. அந்த விபத்தில், உயிர் பலிகளுக்கு காரணமான குற்றவாளி மட்டுமின்றி, அவரைத் துரத்திச் சென்ற பொலிஸாரும், சாலையின் தவறான திசையில்தான் வாகனத்தை ஓட்டிச் சென்றார்கள்.
உண்மையில், அது விதிமீறலாகும். இந்நிலையில், அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 19 பொலிஸாரை சிறப்பு விசாரணைப்பிரிவு அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள்.
எனினும், வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸார் தங்களுடன் பேசவோ, விபத்து சம்பந்தப்பட்ட குறிப்புகளை கையளிக்கவோ மறுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment