கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரின் சமூகவலைத்தள பதிவினை அப்படியே தந்துள்ளான்…
அரச அதிகாரிகள் என்போர் மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற அரசினால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.
அவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் அவர்கள் ஆற்றும் கடமைகள் தொடர்பிலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகள் தொடர்பிலும் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய பொறுப்புடையவர்களாவர்.
எந்தவொரு அரச அதிகாரியும் பதிலளிக்க மறுப்பாராகில் அவர் அந்த நிமிடமே தன்னுடைய மக்கள் வரிப்பணத்திலிருந்து வேதனம் பெறும் தகுதி நிலையை இழந்தவராகின்றார்.
மக்கள் அரச அதிகாரியை சந்திக்க செல்லும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர்களை கண்ணியமாக நடத்தவேண்டிய கடப்பாடு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்களின் அல்லது தங்களுக்கு கீழ் கடமையாற்றும் அலுவலர்களின் சகல கோரிக்கைகளினையும் நிறைவேற்றும் இயலுமை சிலவேளைகளில் அரச அதிகாரிகளுக்கு இல்லாதபொழுதும் பொருத்தமான மாற்றுநடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுக்கு விளங்கப்படுத்தி அதில் சிறந்த தெரிவொன்றை நாடி வந்தவர்கள் பெற்று கொடுக்க உரிய அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் என்பது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திகள் மற்றும் இதர கரிசனைக்குரிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கவும், அந்த தீர்மானங்கள் சரியான முறையில் முன்னெடுக்க்கப்படுகின்றனவா என்பதனை கண்காணிக்கவும் ஒவ்வொரு காலாண்டும் அல்லது அதற்கிடையில் விசேட தேவைகள் உள்ளபொழுதும் நடத்தப்படுகின்ற ஒரு கூட்டமாகும்.
இதற்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தங்களின் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் பூரண அறிவுடன் வருகை தரவேண்டும். அத்துடன் தங்கள் திணைக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மக்களுக்கு மேலும் சிறந்த சேவைகளினை வழங்க தேவைப்படும் வளங்கள் தொடர்பான தகவல்களினையும் கொண்டுவருதல் வேண்டும்.
தங்கள் திணைக்களங்கள், நிறுவனங்கள் தொடர்பில் கேள்விகள் கேட்கப்படும் பொழுது உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை.
அதுபோல அது தங்களை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்யவோ அல்லது பிரச்சனைகளில் சிக்கவைக்கவோ கேட்கப்படும் கேள்விகள் என்று கருதி (சிலவேளை உண்மை அதுதான் என்றாலும்) பொறுமை இழக்கவோ அல்லது பதற்றமடையவோ தேவையில்லை.
சிறந்த, வினைத்திறனான, நிறுவனம் தொடர்பில் பூரண அறிவுடைய, முதிர்ச்சியுள்ள அரச அதிகாரியிடம் கேள்விகள் கேட்கப்படும் பொழுது அவரிடமிருந்து வரும் பதில் தெளிந்த தூய்மையான நீரோடை பாய்ந்து செல்வது போன்று இருக்கவேண்டும்.
சிலவேளைகளில் உடனடியாக பதில் வழங்க தேவையான தரவுகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கூட்டம் நடந்து கொண்டுள்ளபொழுதே அல்லது ஓரிரு நாட்களினுள் அந்த தரவுகளினை பெற்று வழங்குதல் வேண்டும்.
கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களினை தனிப்பட்ட தாக்குதல்களாக கருதி (சிலவேளை உண்மையில் அதுவாக இருக்கலாம்) வெளியில் சென்றபிறகும் விமர்சித்து கொண்டிருப்பது அவசியமற்றது. கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கரிசனைகள் இருக்குமாயின் கூட்டம் முடிவடைந்த பின்னர் அது தொடர்பில் இணை தலைவர்களுக்கு முறைப்பாடு செய்யமுடியும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் சிறப்பாக இருந்தது.
அதிகாரிகள் இனிமேல் ஆயத்தமாக வரவேண்டும் என்பதே அங்கே Take Home Message ஆகவிருந்தது.
0 comments:
Post a Comment