யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
நோய் தொற்றுக்கான காரணம்
எலிக்காய்ச்சல் என கூறப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும்.
யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இந்நோய் பரவல் அதிகரித்துள்ளது.
லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளான எலிகள். நாய்கள், கால்நடைகளான ஆடுகள்,மாடுகள் , பன்றிகள் போன்றவரின் எச்சங்கள் , கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து , கிணறுகள் , நன்னீர் தேக்கங்கள் , குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கலந்து விடுவதனால் , அந்த நீரினை பயன்படுத்துபவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
அந்த நீரை பருகுவதால் மாத்திரமின்றி , கால்கள் , கைகளில் காயங்கள் உள்ளவர்கள் அந்த நீரினால் கை கால்களை கழுவும் போது , அவர்களையும் நோய் தாக்க கூடும். அது மாத்திரமின்றி கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக கூட நோய் தொற்று ஏற்பட கூடிய சாத்திய கூறுகள் உண்டு.
நோய் அறிகுறிகள்
அதிக காய்ச்சல், நடுக்கம் மற்றும் தலைவலி ஆகியவை லெப்டோஸ்பைரோசிஸின் அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு, மூளைக்காய்ச்சல், சுவாசக் கோளாறு ஆகியவற்றிற்கு வழிவகுத்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தும்.
அதனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்கும் சந்தர்ப்பத்தில் நோயினை பூரணமாக குணமாக்க முடியும். எனவே காய்ச்சல் தொடர்பில் அசமந்தமாக இருக்காது வைத்தியர்களை நாடி சிகிசிச்சை பெறுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பாதிப்பு அதிகமான இடங்கள்.
யாழ்ப்பாணத்தில் நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலையே நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலையுமே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
குறித்த நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்படின் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள்
இந்நோய் பரவக் கூடிய ஆபத்து இலக்கினரான விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் உதவியுடன் கிராம மட்ட விவசாய குழுக்கள் மூலம் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் கடல்நீர் ஏரிகளில் , குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் துப்பரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இத் தடுப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு தடவை உட்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை எலிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும் தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காகவும் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட மருந்துகள் யாழ் மாவட்டத்திலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும், இந்நோய் தீவிரமாக பரவி வரும் பிரதேசங்களிலுள்ள வைத்திசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
கொழும்பில் இருந்து வந்த விசேட குழு.
மத்திய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் குழு இந் நோய் பரம்பலை ஆய்வு செய்வதற்காக யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்தது. அக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்
யாழ் போதனா வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும் , பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் சென்று ஆய்வு செய்ததுடன் சில பிரதேசங்களுக்கு கள விஜயமும் மேற்கொண்டிருந்தனர்.
நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள
அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். சுகாதார முறைகளை பேணுதல் மூலம் நோய்த் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
குறிப்பாக தொற்றுக்குள்ளான தண்ணீருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வெள்ள நீர், சேறு மற்றும் தேங்கி நிற்கும் நீர் என்பன விலங்குகளின் சிறுநீற்றால் தொற்றாக்கப்பட்டிருக்கலாம். அதனால் அந்நீரினை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
அதாவது, சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகுதல், குளம் குட்டைகள், வெள்ளத்தால் மூழ்கிய கிணறுகள் என்பவற்றில் குளிப்பதையோ , நீந்துவதையோ தவிர்த்துக்கொள்ளல். அந்த நீரை அருந்தவோ, வாய் கொப்பளிக்கவோ கூட பயன்படுத்த வேண்டாம்.
கால்களில் செருப்பு அல்லது சப்பாத்து இல்லாமல் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் , சேற்று நிலங்களில் இறங்க வேண்டாம். விவசாயிகள் கூட வயல் நிலங்களில் இறங்கும் போது , சுகாதார முறைமைகளை பின்பற்ற வேண்டும்.
சரியான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வந்த பின்னரும், விலங்குகளை கையாண்ட பின்னரும் சவர்க்காரம் மற்றும் நல்ல நீர் கொண்டு கை கால்களை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புடன் இருந்தால் மாத்திரமே எம்மையும் எம்மை சூழவுள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment