உண்மையாகவே உதவும் மனப்பாண்மையில் பல புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல உதவிகளை அவர்கள் செய்வதற்கு தயாராக உள்ளார்கள். அதே நேரம், சில புலம்பெயர் தமிழர்கள் தங்களது பகட்டு விளம்பரத்திற்காகவும் தங்களை மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகவும் உதவிகளை செய்து வருகின்றார்கள். தங்களது பெயர், விபரங்கள், புகைப்படங்களுடன் உதவி செய்வது தொடர்பாக வீடியோ வருவதையிட்டு அவர்கள் பெருமைப்படுகின்றார்கள். அத்துடன் சில புலம்பெயர் உறவுகள், தங்களது வரிச்சலுகைகளுக்காக இலங்கையில் உள்ள சில உதவும் நிறுவனங்களுடன் பேரம் பேசி, அந் நிறுவனங்களுக்கு பணத்தை அனுப்பி வரிச்சலுகைகளை பெற்றுவருகின்றார்கள். ஒரு சில புலம்பெயர் தமிழ்க் காமுகர்கள் உதவி செய்கின்றேன் என்ற போர்வையில் வடக்கு,கிழக்கில் உள்ள வறுமையில் வாழும் பெண்களை குறிவைத்து செயற்பட்டு வருகின்றார்கள்.
இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்து தமிழர்பகுதிகளில் பல யூரியூப்பர்கள், உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் பல்வேறுபட்ட தில்லாலங்கடி வேலைகளைச் செய்து பெரும் பணம் சுருட்டி வருகின்றார்கள். இவற்றை புலம்பெயர் தமிழர்கள் பலர் அறிந்தாலும் ஏராளமானவர்கள் இவ்வாறான யூரியூப்பர்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் உதவி தேவை என கூறுபவர்களிடம் தொடர்ச்சியாக ஏமாறுகின்றார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் வன்னியில் உள்ள பாடசாலை ஒன்றில் சப்பாத்து இல்லாமல் ஒழுங்கான பாடசாலைப் புத்தகப் பைகள் இல்லாது சில மாணவர்கள் குறித்த பாடசாலையில் கற்கின்றார்கள் என புலம்பெயர் தமிழர்களை நோக்கி வீடியோ ஒன்றை யூரியூப்பர் வெளியிட்டிருந்தான். அந்த வீடியோவில் குறித்த பாடசாலை அதிபரும் தங்களது பாடசாலையில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்கள் உள்ளதாக கருத்து தெரிவித்திருந்தனர். இவ்வாறான நிலையில் அந்த வீடியோவைப் பார்வையிட்ட புலம்பெயர் தமிழர்களில் சிலர் அதிபரையும் யூரியூப்பரையும் தொடர்பு கொண்டு குறித்த மாணவர்களுக்கான சப்பாத்து, புத்தகப் பைகள் போன்றவற்றுக்கு எவ்வளவு செலவாகும் என கேட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் 190 மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகள் தேவை என கூறி மொத்தமாக 7 லட்சத்திற்கு மேல் தேவை என கூறியுள்ளார்கள்.
இதற்கு அமைவாக அவுஸ்ரேலியாவிலிருந்து இரு தமிழர்கள் சேர்ந்து 7 லட்சத்து 60 ஆயிரம் அனுப்பியுள்ளார்கள். குறித்த மாணவர்களுக்கு உதவிகளை வழங்கிய பின்னர் அதற்கான செலவு விபரங்களின் பில்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் தங்களுக்கு தருமாறு கேட்டுள்ளார்கள்.அதிபர் அவர்களுக்கு அந்த ஆதாரங்களை வழங்கினார்.
இதில் அதிபரும் யூரியூப்பரும் என்ன ஏமாற்றினார்கள் என்றுதானே நினைக்கின்றீர்கள். அதே மாணவர்களுக்கு லண்டனில் இருந்தும் 7 லட்சம் அணுப்பபட்டுள்ளது. கனடாவிலிருந்து 7 லட்சத்து 15 ஆயிரம் ரூபா அனுப்பப்பட்டுள்ளது. வேறு சில நாடுகளிலிருந்து சில லட்சங்கள் பணம் அனுப்பபட்டதாக தகவல். இவ்வளவு பணம் அனுப்பியவர்களுக்கும் அதே பில்லையும் அதே புகைப்படங்களையும் நன்றி தெரிவித்த பாடசாலை லெட்டர்பாட்டில் எழுதுப்பட்ட கடித்தையும் அனுப்பி வைத்துள்ளார்கள் குறித்த அதிபரும் யூரியூப்பரும். கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபா அளவில் இவர்கள் சுருட்டியுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பாக அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அதிபரை கேட்ட போது அதிபர் அவரை அச்சுறுத்தியுள்ளார். குறித்த ஆசிரியரும் சில செயற்பாடுகளில் தவறுசெய்பவர். பாடசாலைக்கு மது போதையில் செல்பவர். இதற்கான ஆதாரங்கள் அதிபரிடம் உள்ளது. இதனால் குறித்த ஆசிரியர் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காது இருந்துள்ளார். குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களில் சில ஆசிரியர்களுக்கு அதிபர் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது தொடங்கி அவர்கள் பிந்தி வந்தாலும் கவனம் செலுத்தாமல் இருப்பது வரை பல்வேறு சலுகைகளை வழங்கி வந்ததால் அந்த ஆசிரியர்கள் அதிபரின் ஊழல்களில் கவனம் செலுத்துவதில்லை என தெரியவருகின்றது.
அதிபரிடம் வெளிநாட்டு உதவி தொடர்பாக கேட்ட குடிகார ஆசிரியரின் சொந்த இடம் யாழ்ப்பாணமாகும். அந்த ஆசிரியர் தங்கியிருப்பது வேறு ஒரு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுடன் அவர்களது பாடசாலையில் காணப்படும் விடுதி ஒன்றில். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை குறித்த யூரியூப்பர் அந்த ஆசிரியர் தங்கியிருந்த விடுதிக்கு காரில் வந்துள்ளார். அன்றைய தினம் அங்கு தங்கியிருந்த ஆசிரியர்களில் இருவர் யாழ்ப்பாணம் வந்துவிட்டனர். அந்த ஆசிரியரும் மற்றுமொரு யாழ்ப்பாண ஆசிரியருமே அங்கு இருந்துள்ளார்கள். சிறப்பான ஒரு நடிகனைப் போல அக்டிங் செய்தபடி குறித்த யூரியூப்பரும், அந்த யூரியூப்பரை வீடியோ எடுத்துக் கொண்டு இன்னொருவரும் மேலும் ஒரு அடியாளுமாக 3 பேர் குறித்த விடுதி வளவுக்குள் நுழைந்துள்ளார்கள். நுழைந்த பின்னர் அந்த ஆசிரியரின் பெயரை கூறி வெளியே வாருங்கள் என அழைத்து அந்த ஆசிரியர் வெளியே வந்தவுடன் ”இந்த ஆசிரியர் மது போதையில் பாடசாலையில் கற்பிப்பவர், இவர் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் ஆதாரங்கள் உள்ளது என கூறி அந்த ஆசிரியரை வீடியோ எடுத்ததுடன் இவ்வாறு இனி மது போதையில் கற்பித்தால் இந்த வீடியோவை வெளிிவிடுவோம் என கூறிச் சென்றுள்ளார்கள்.
இதன் பின்னர் குறித்த ஆசிரியரிடம் அந்த விடுதியில் தங்கியிருந்த அதே பாடசாலை ஆசிரியர் கேட்ட போது அதிபர் மற்றும் யூரியூப்பரின் திருவிளையாடல்கள் அம்பலமாகின. யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் ஏனைய இரு ஆசிரியர்களும் விடுதிக்கு சென்ற பின்னர் நடந்த விடயங்கள் அவர்களுக்கு மற்றைய ஆசிரியரால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ஆசிரியர்கள் உடனடியாக தமது பாடசாலை அதிபருக்கு குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியதுடன் அச்சுறுத்திய யூரியூப்பர் மற்றும் பாடசாலை அதிபருக்கு எதிராக பொலிசாரிடம் முறையிட ஆயத்தமானர்கள். இந்த விடயம் யூரியூப்பர் மற்றும் பாடசாலை அதிபருக்கு தெரிந்தவுடன் குறித்த விடுதிக்கு யூரியூப்பரும் அதிபரும் விரைந்து வந்ததுடன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் தெரியவருகின்றது.
அவர்களது வெளிநாட்டு பண மோசடி தொடர்பாக குறித்த ஆசிரியர்கள் கேள்வி கேட்ட போது யூரியூப்பரும் அதிபரும் மௌனமாக இருந்துள்ளார்கள். அதன் பின் ஏனைய நிதியை பாடசாலை அபிவிருத்தி நிதியில் சேர்ப்பதாக கூறிச் சென்றதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியுள்ளது. குறித்த 20 லட்சத்துக்கு மேலான பணத்தை அவர்கள் பாடசாலை அபிவிருத்த நிதியில் சேர்க்க தவறினால் அந்தப் பாடசாலை அதிபரின் புகைப்படம் மற்றும் யூரியூப்பரின் முழு விபரங்களையும் நாம் இங்கு வெளியிடுவோம். குறித்த யூரியூப்பர் அந்த பாடசாலையின் உதவி கோரும் வீடியோவை தனது பேஸ்புக் மற்றும் யூரியூப் தளங்களிலிருந்து தற்போது அகற்றியுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஏற்கனவே குறித்த யூரியூப்பர் தொடர்பாக பல்வேறு பட்ட முறைப்பாடுகள் உள்ளது. அப்பாவி புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி செயற்படும் இவ்வாறான யூரியூப்பர்கள் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியிடப்படும்.
0 comments:
Post a Comment