யாழ்ப்பாணத்தில் ஈழம் போய்ஸ் (eelam boys) என்ற பெயரில் இயங்கி வரும் குற்றக்கும்பல் ஒன்று பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் சின்னமான பாயும் புலியை ஒத்த புலிச்சின்னத்தையே இந்த குற்றக்கும்பலும் பயன்படுத்தி வருகிறது.
திருட்டுக் குற்றச்சாட்டில் கைதான இளைஞன் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியிலுள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த, தனுஸ்ராஜ் என்பவரே யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வசாவிளான், குட்டையன்புலம் பகுதியை சேர்ந்தவர்.
அவரது கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, வாள்வெட்டு கும்பல் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியானது.
புன்னாலைக்கட்டுவன் பகுதியை மையமாக கொண்டு இந்த சமூக விரோதக்குழு செயற்பட்டு வருகிறது.
இந்த குழுவை வெளிநாட்டில் உள்ள ஆவா குழு ரௌடியான பிரசாத் ஜாய் என்பவனே இயக்கி வருவதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட தனுஸ்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியிலுள்ள பிரசாத் ஜாயின் வீட்டில் சமூக விரோதிகள் ஒன்றுகூடும் தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்டனர். அங்கு பல்வேறு விதமான வாள்கள், கருப்பு ஜக்கட்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிசார் மீட்டனர்.
வெளிநாட்டில் இருக்கும் ரௌடிகள், அங்கிருந்தபடியே கூலிப்படை ஒப்பந்தங்களை பெற்று, ஈழம் போய்ஸ் ரௌடிகளிற்கு ஒரு தொகை பணத்தை வழங்கி, தாக்குதல்களை நடத்தியது தெரிய வந்துள்ளது.
ஜேர்மனியிலுள்ள 45 வயதான ஒரு பெண்ணே, யாழ்ப்பாண ரௌடிகளை போசித்து வளர்ப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, வீடு உடைப்பு தாக்குதல்களை நடத்துவதற்கு வௌநாட்டில் உள்ளவர்களிடம் ஒப்பந்தங்களை பெற்று, இங்குள்ள ரௌடிகளுக்கு பணம் அனுப்பி, தாக்குதல் நடத்தும் செயற்பாட்டில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தன்னை விட 10 வயது குறைந்த ஆவா குழு ரௌடியொருவனை வெளிநாட்டுக்கு அழைத்து, அவனை திருமணம் செய்து வசித்து வருகிறார்.
இவர்கள் இயக்கிய பல வாள்வெட்டு குழுக்கள் பொலிசாரின் கிடுக்குப்பிடி நடவடிக்கையில் சிக்கியதை தொடர்ந்து, யாழ் நகருக்கு வெளியே, புன்னாலைக்கட்டுவனில் ஈழம் போய்ஸ் குழுவை உருவாக்கியுள்ளனர்.
ஜேர்மனியிலுள்ள அண்ணன், தங்கைக்கிடையில் ஏற்பட்டு காணிப்பிணக்கின் எதிரொலியாக, கடந்த சில நாட்களின் முன்னர் அச்சுவேலியில் வன்முறைச் சம்பவம் ஒன்று பதிவாகியது. இந்த வன்முறை சம்பவமும் ஈழம் போய்ஸ் குழுவினராலேலேயே நடத்தப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று ஈழம் போய்ஸ் ரௌடியொருவர் பொலிசாரிடம் சிக்கியதும், ஜேர்மனிலுள்ள பெண், பொலிசாரை தொடர்பு கொண்டு, கைதானவரை விடுவிக்குமாறு கேட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈழம் போய்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த சமூக விரோதக்குழு தனது குறீட்டு இலக்கமாக 004 என பயன்படுத்தியுள்ளது. இந்த சமூக விரோதிகள், புன்னாலைக்கட்டுவனில் மதுபோதையில் வீதியில் நின்று, அந்த பகுதியில் செல்பவர்களை பொழுதுபோக்காக அடித்து துன்புறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது. இது தொடர்பான சிசிரிவி காணொளியும் வௌியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முன்னர் உருவாகிய ரௌடிக்குழுக்களை பொலிசார் முளையிலேயே கிள்ளியெறிந்திருந்தால், வாள்வெட்டு கலாச்சாரம் பரவலடைந்திருக்காது என்ற அபிப்பராயம் பொதுவாக உள்ளது. அந்த அபிப்பிராயம் மீள உருவாகாமல், இந்த ரௌடிக்குழுவை முளையிலேயே கிள்ளியெறிய பொலிசார் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
0 comments:
Post a Comment