வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியை வழங்க தயார் எனில் மகிந்தவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது .மகிந்த மட்டுமல்ல ரணில் நாம் கோருவதை தருவாராக இருந்தால் அவரை ஆதரிக்கவும் தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார் .
நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் கூறுவது போன்று இந்த முடிவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்குமானால் நிச்சயமாக வரவேற்க கூடிய ஒரு சிறந்த முடிவு .
இதுவரை காலமும் தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்கிய பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வதற்கான ஓர் நல்ல சந்தர்ப்பம் ஆக அமையும் .
இந்த முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்குமானால் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள் .ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களின் கருத்துக்கள் செவிமடுக்கப்படுவதில்லை .
சுமந்திரன் எடுக்கும் முடிவுக்கு சம்பந்தன் ஐயாவும் மாவை அவர்களும் தலைசாய்ப்பர்கள் .இது தான் இம்முறையும் நடக்குமா ?
வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி என்பது நினைத்தே பார்க்க முடியாத ஓர் எட்டாக்கனி என்பது அனைவருக்கும் தெரியும் .அவ்வாறான ஓர் தீர்வினை பேரினவாத ஆட்சியாளர்கள் ஒரு போதும் தரப்போவதில்லை .இருந்தாலும் தமிழ் இனத்தின் உரிமையை முன்னிறுத்தி எடுக்கப்படும் இந்த முடிவு நிச்சயமாக சிங்கள ஆட்சியாளர்களை சிறிதளவேனும் கிலி கொள்ளவைப்பதுடன் சிந்திக்க வைக்கும் .
பாராளுமன்றில் அடுத்த அமர்வில் பெரும்பான்மை கண்டிப்பாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மகிந்த மற்றும் ரணில் உள்ளார்கள் .ஆகவே இம்முறையும் நிச்சயமாக சிறுபான்மை கட்சிகளின் வாக்குகள் தான் அடுத்த பிரதமர் யார் என்பதனை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க போகின்றது.
மகிந்த ,ரணில் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 வாக்குகளை தம் பக்கம் ஈர்ப்பதற்கு அரசியல் பேரம் பேசுவார்கள் .வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியை ரணில் மற்றும் மகிந்தவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் கோர வேண்டும் .அது மட்டுமல்லாது அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கண்டிப்பான நிபந்தனை விதிக்க வேண்டும் .
வரலாற்றில் இடம்பிடிக்க கூடிய சிறந்த முடிவினை எடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடிக்குமா ?இதுவரை காலமும் தீபாவளிக்கு முன்னர் தீர்வு வருகின்றது என்று கூறி மக்களை அடி முட்டாள்கள் ஆக்கி வரும் பாவங்களுக்கு பிராயசித்தம் தேடுமா ?அல்லது வழமை போன்றே நிபந்தனை அற்ற ஆதரவினை அளித்து தமிழர்களின் அரசியலை மேலும் சூனிய நிலைக்கு தள்ளி தமிழ் மக்களின் அபிலாசைகளை சிங்கள பேரினவாதிகளிடம் அடகு வைக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
-ஜெயமதன்-
0 comments:
Post a Comment