மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமை இலங்கை அரசியல் யாப்புக்கு முரணானது.
ஒரு பிரதமர் பதவியில் இருக்கும்போது இன்னொருவரை பிரதமராக நியமிக்க முடியாது. ஒரு பிரதமர் பதவியேற்ற காலத்தில் இருந்து 4 ஆண்டுகள் பூர்த்தியாகமுன் அவரை அப்பதவியிலிருந்து நீக்கமுடியாது. ஒரு பிரதமரின் பதவி பின்வரும் 4 காரணங்களால் இல்லாமல் போகலாம்
1, அவர் தானாக பதவி விலகுமிடத்து
2 ,அவர் இறக்குமிடத்து
3, அவர் செயற்பட முடியாதவாறு உடல் ஊனமுறுமிடத்து
4, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறை வேற்றப்படுமிடத்து
இந்த 4 காரணங்களில் ஒன்றால் பிரதமரின் பதவி வெற்றிடமாகும் போது
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெறக்கூடும் என்று கருதும் ஒருவரை பிரதமராக நியமிக்கலாம். இதன் படி தற்போது ரணிலின் பிரதமர் பதவிவெற்றிடமாகவில்லை.
மேலும் வரும் யூன் மாதத்திற்கு முன் ஜனாதிபதியால் ரணிலை பதவி விலக்க முடியாது.
இந்நிலையில் ஒருவர் பிரதமராக இருக்கும் போது இன்னொருவரை பிரதமராக நியமிக்க முடியாது.
அதன்படி ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை அரசியல் யாப்புக்கு விரோதமானது.
எனவே இலங்கை அரசியல் யாப்பு தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது என்பது சந்தேகமில்லை
இந்நிலையில் ரணில் தனக்கு ஆதரவான பலம் பொருந்திய வெளிநாட்டு உதவியைக்கொண்டுதான் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
இதில் தற்போது ரணிலுக்கு நேரடியாக உதவக்கூடிய நாடுகளின் வரிசையில் முதலாவது அமெரிக்காவே உண்டு.
அரசியல் யாப்புக்கு விரோதமான இந்த ஆட்சிக்கவிழ்ப்பு மேற்கொண்டமைக்கும், புதிய பிரதமரை நியமித்ததற்கும் பின்னால் பலமான ஒரு குற்றச்சாட்டை இவர்கள் ரணில் மீது முன் வைக்க வேண்டும்.
,கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு இந்திய உளவுத்துறையான றோ முயற்சி செய்ததாகவும், இது தொடர்பாக கேரளவைச் சேர்ந்த றோ உளவு அதிகாரி கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஜனாதிபதியாகிய தன்னையும், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்கசவையும் படுகொலை செய்ய றோ முயற்சித்ததாக ஜனாதிபதி மைத்திரி அமைச்சர்களுக்கு கூறினார்.
இந்தச் சதியில் ரணிலுக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது இலங்கை யாப்பின் படி ஜனாதிபதி இறக்குமிடத்து பிரதமரே தன்னியல்பாக ஜனாதிபதியாவார்.
மேற்படி சதி பற்றி விசாரணை செய்வதற்கான அதிகாரம் பிரதமரின் பொறுப்பின் கீழுள்ள அமைச்சிடம் இருக்கும் நிலையில் பிரதமர் இந்த விசாரணையை மூடி மறைத்துவிட்டார் என்றும், ரணில் தான் ஜனாதிபதியாக வருவதற்காக றோவுடன் இணைந்து இக்கூட்டுச் சதிமுயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அத்துடன் ராஜபக்ச குடும்பத்தில் பலமானவர் கோதாபய ராஜபக்கச என்றும் அவரும் கொல்லப்பட்டு விட்டால் மகிந்த பலவீனமடைந்து விடுவார் என்றும் கூடவே கோதாபயவையும் கொல்லுவதற்கு இச்சதியில் திட்டமிடப்பட்டது என்றும் கதை நீள்கிறது
இயல்பாகவே சிங்களவர் மத்தியில் இந்திய எதிர்ப்பு வாதம் உண்டு இச்சதிமுயற்சி செய்தியை கேட்டு மகாசங்கமும் இராணுவமும் பொறுத்துக் கொள்ளமாட்டாது ஆதலால் இராணுவத்தினதும் மகா சங்கத்தினதும் பூரண ஆதரவின் பின்னணியில் இந்த ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள மைத்திரியும், ராஜபக்ச குடும்பமும் துணிந்திருக்க வேண்டும்
மகாசங்கத்தினதும், இராணுவத்தினதும் பூரண ஆதரவு இருக்குமிடத்து அரசியல் யாப்பை மீறுவது ஒரு பொருட்டல்ல. அதேவேளை வெளிநாடுகள் இவ்விடயத்தில் தலையிடாமல் தடுக்க வேண்டும் என்றால் சில கடும் நடவடிக்கைகளை மைத்திரியும் மகிந்தவும் எடுக்க வேண்டியிருக்கும்
அதாவது இச்சதியின் பெயரால் ராஜதுரோக குற்றச்சாட்டின் அடிப்பையில் ரணிலின் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும். அவ்வளவு தூரத்துக்கு இலங்கை அரசியல் எரிநிலையடைந்துள்ளது.
இதில் இந்தியா சம்பந்தப்படுவதால் இலங்கை விடயத்தில் நேரடியாகவே அரசியல் ராஜதந்திர கதவுகள் மூடப்பட்டுள்ளது.
அப்படியானால் இந்தியா எதையாவது செய்ய வேண்டும் என்றால் அமெரிக்காவின் ஊடாகவே செய்ய முடியும்
இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் பிரதமர் நியமணத்தை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரியை அமெரிக்கா வற்புறுத்த இடமுண்டு.
அதேவேளையில் இந்த திடீர் பிரதமர் நியமணத்தை ஞாயப்படுத்துவதற்காக ராஜதுரோக குற்றச்சாட்டின் கீழ் ரணிலை சிறைக்குள் தள்ள மைத்திரியும், ராஜபக்சவும் முயலவும் முடியும்.
இங்கு ரணிலை சிறைக்குள் தள்ளுவதா? அல்லது மகிந்த ராஜபக்சவை பிரதமர் நாற்காலியில் இருந்து தள்ளுவதா? என்ற இரண்டில் ஒரு கேள்விக்கு இலங்கை அரசியல் வரப்போகும் சிலநாட்களில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்
எப்படியோ இதில் அமெரிக்காவின் பாத்திரம்தான் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும்
0 comments:
Post a Comment