ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி கூட்டணி அரசாங்கத்தை கலைத்து விட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து பொறுப்பை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்கும். கடந்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உட்பட கட்சிகளில் கூட்டணி அரசாங்கமாக இருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர், அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தெளிவாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகிய பின்னர் அரசாங்கம் என்று எதுவும் இருக்காது. நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு வந்து விட்டது. அரசாங்கம் முடிவுக்கு வந்து விட்டால் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நாட்டை பாதுகாக்கும் இறுதி சந்தர்ப்பமாக நாட்டை நேசிக்கும் தலைவர்களை கொண்ட புதிய அரசாங்கத்தை அமைப்போம்.
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கே இருக்கின்றது என்பதை நாங்கள் ஒப்புவித்து காட்டுவோம். கட்சிகளின் தலைவர்கள் பசில் ராஜபக்ச மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றம் மூடப்படவில்லை. ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார். அவர் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவார். அப்போது மகிந்த ராஜபக்சவுக்கு 113 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை நாட்டுக்கும் உலகத்திற்கும் காட்டுவோம்.
தெளிவான ஜனநாயகத்தை ஏற்படுத்தவே நாங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறோம். சர்வாதிகார பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு மீண்டும் ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொடுப்போம்.
புதிய பிரதமரின் நியமனம் சட்டவிரோதம் என்றால் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பை பெற வேண்டும். தனி நபருக்கு அது பற்றி தீர்மானிக்க முடியாது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment