ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மஹிந்த குடும்பத்தைப் பலிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் என கருணா அம்மான் எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாக எமது நாட்டு மக்கள் அரசியல் ரீதியாகவும், அரசியல் உரிமைகள் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.
வழங்கப்பட்ட எவ்வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத அரசாங்கமாகவே நல்லாட்சி அரசாங்கம் நடந்துகொண்டிருந்தது. தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்ததொரு முடிவொன்றை எடுத்திருக்கின்றார்.
எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். அந்த வகையில் நாங்கள் ஜனாதிபதியிற்கு நன்றிகூறுவதோடு, தீர்க்கதரிசனமான இம்முடிவை எடுத்தமைக்கு அவரைப் பாராட்டுகின்றோம்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நான் கூறியிருந்தேன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் ஒரு சிறந்த மாற்றம் இந்த நாட்டில் ஏற்படும் என்று அப்போது அதனைப் பலர் வேடிக்கையாகப் பார்த்தார்கள் ஆனால் இன்று அது நடந்தேறியிருக்கின்றது.
இந்த நாட்டில் ஒரு சிறந்த தலைவர் உருவாக வேண்டும். அந்த வகையில் எமது முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரின் ஊடாக இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பின்தங்கிய நிலையில் ஒரு மாற்றம் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அதேபோல் எங்களுடைய அரசியற் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியானது தொடர்ந்து எமது மஹிந்தவின் பின்னால் நின்று வருகின்றோம்.
எவரையும் நம்பி சோரம் போகவும் இல்லை எவருக்குப் பின்னும் வால்பிடிக்கவும் இல்லை. அதே போல் தொடர்ந்தும் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே வரவேற்கின்றோம்.
குறிப்பாக வடக்கு, கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் பெரும்பாலானோர் இதனை வரவேற்றிருக்கின்றார்கள். ஏனெனில் அந்தளவிற்கு ஒரு பின்தள்ளப்பட்ட நிலை வடக்கு, கிழக்கிலே இருக்கின்றது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மஹிந்த குடும்பத்தைப் பலிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.
குறிப்பாக கொலை முயற்சிகள், அரசியற் சூழ்ச்சிகள் போன்ற விடயங்களிலே கவனத்தைச் செலுத்தினார்களே தவிர இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.
அமெரிக்க டொலரிகன் விலை அதிகரிப்பானது ஒரு நாட்டின் முன்னேறாத நிலையினையே காட்டுகின்றது. பிச்சைக்கார நாடாக மாறுவதற்கான அறிகுறிதான் அது. அத்துடன் மத்திய வங்கிக் கொள்ளை போன்ற பல விடயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கின்ற வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் அவருக்கு ஆதரவை வழங்க முன்வரவேண்டும்.
அரசியல் யாப்பு என்பது ஒரு போலியான விடயம். ஏனெனில் கடந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எவ்வித நிபந்தனையுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் ஆதரவை வழங்கியது.
அதன் பின்னரான ஒரு நாடகமாகத் தான் இந்த அரசியல் யாப்பு எழுதப்பட்டது. இதனை உண்மையில் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
சம்பந்தன் பல வருட அனுபவங்கள் இருந்தும், சாணக்கியமான அரசியல்வாதி எனப் பலராலும் கூறப்பட்டாலும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கை போன்று முட்டாள் தனமான நடவடிக்கையை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் எதுவித நிபந்தனைகளும் அற்ற விதத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைத் தெரிவித்த பின்பு அரசியல் தீர்வைத் தா தா என்று அவர்களின் பின்னால் அலைவது என்பது ஒரு வேடிக்கையான விடயம்.
இனிவரும் காலங்களிலாவது அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போது ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. பெரும்பான்மை பலத்தை நிருபிப்பதற்கு மஹிந்தவிற்கு ஆதரவு தேவை.
இந்தத் தருணத்திலாவது சம்பந்தன் புத்திசாலியாக இருப்பாராக இருந்தால் வெளியில் இருந்தோ அல்லது உள்ளிருந்தோ நிபந்தனை அடிப்படையில் ஆதரவைக் கொடுக்க முன்வருவாராக இருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு எற்படும்.
அரசியல் கைதிகளில் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணிலிடம் காலில் கெஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் நிபந்தனை அடிப்படையில் சென்றிருந்தால் இவற்றைச் செய்திருக்கலாம்.
எவ்வித அரசியல் சாணக்கியமும் அற்ற நிலையில் கைகோர்த்து அதன் பிற்பாடு கேட்பதென்பது ஒரு தவறான விடயம். எனவே இனிவரும் காலங்களிலாவது சிறப்பான முறையில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
உண்மையிலேயே எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது. அரசியற் தீர்வு வரவேண்டும். எமது அரசியற் கைதிகளில் விடுபட வேண்டும், அதற்கான நிபந்தனைகளை நாங்கள் இடவேண்டும்.
எனவே இதற்கான வாய்ப்புகள் பல வந்தும் அவற்றைத் தவற விட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்களின் சுகபோக வாழ்விற்காகவும், தங்கள் நலன்களுக்காகவும் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தாமல் எமது மக்களின் பொதுநலன்களில் அக்கறையுள்ளவர்களாகச் செயற்படுவார்களாக இருந்தால் அவர்களை உண்மையிலேயே நாங்கள் வரைவேற்கின்றோம்.
நாங்கள் யாருக்கும் சோரம் போனவர்களும் அல்ல. பதவி பட்டத்திற்காக வால்பிடித்தவர்களும் அல்ல. இன்றும் நாங்கள் பொறுமையாக இருந்திருக்கின்றோம்.
எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து நாங்கள் முன்னாள் ஜனாதிபதி இன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் பயணித்தவர்கள்.
நாங்கள் மாறவுமில்லை. யார் பின்னாலும் போனதும் இல்லை. எனவே தொடர்ந்தும் நாங்கள் தற்போதைய பிரதமர் மஹிந்தவிற்கு எங்கள் ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment