தொடர்ந்து 20 நிமிடங்கள் செல்போனில் பேசினாலே காது கேளாமை, மூளைப் புற்றுநோய் போன்ற நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் ஒரு சான்றுதான் செல்போன். உலக விஷயங்கள் அனைத்தையும் செல்போனில் அறிந்துகொள்ள முடியும்.
தற்போதைய காலகட்டத்தில், செல்போன் இல்லாதவர்களையே நாம் பார்க்க முடியாது என்ற அளவுக்கு உள்ளது அவற்றின் வளர்ச்சி. இதற்கு இணையாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளை வாரி இறைத்துவருகின்றன. செல்போன்கள் பயன்பாடு குறித்து மும்பை ஐஐடி-யைச் சேர்ந்த பேராசிரியர், சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதில், தினமும் தொடர்ந்து 20 நிமிடங்கள் செல்போனில் பேசினால், அடுத்த 10 வருடங்களில் மூளைப் புற்றுநோய், காதுகேளாமை போன்ற நோய்களால் பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யு.என்.ஐ என்ற ஆங்கில செய்தி ஊடகத்துக்கு ஐஐடி பேராசிரியர் ஆஷா மிஸ்ரா அளித்துள்ள பேட்டியில், ‘சமீபகாலமாக மூளைக்காய்ச்சல், மூளைப் புற்றுநோய் போன்றவை அதிகரித்துவருகின்றன. இதுகுறித்து ஆய்வுசெய்தபோது, இதன் முக்கியக் காரணமாக செல்போன் உள்ளது. மேலும், இது தொடர்பாக நான் பல காது, மூக்கு, தொண்டை நிபுணர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்களும் இதே கருத்தையே முன்வைக்கின்றனர்.
செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள், மூளையை அதிக பாதிப்படையச் செய்வதால், இதுபோன்ற நோய்கள் உருவாகின்றன. 20 முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக செல்போன் பேசினால், அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, காதுமடல்களைச் சூடாக்குகிறது. இதுதொடர்ச்சியாக நடைபெறும்போது, சிலருக்கு விரைவில் கேட்கும் தன்மை குறைந்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment