முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் வெடிபொருள் மற்றும் விடுதலை புலிகளின் சீருடை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் 22 ஆம் திகதி புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் சென்ற முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்துவரும் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் இதுவரை 12 பேரை கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 12 ஆம் திகதி கிளிநொச்சி சாந்தபுரத்தினை சேர்ந்த மேலும் ஏழு பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைதுசெய்திருந்தனர்.
இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த ஏழு சந்தேகநபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாவுடன் மூன்று ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதவான் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இந்த ஏழுபேர் மீதும் பாரதூரமான குற்றம் சுமத்தப்படாத காரணத்தால் வழக்கில் இருந்து அவர்களை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பில் மேலும் ஒருவரை கைதுசெய்யவேண்டியுள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து இந்த வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment