தியாகி திலீபனின் நினைவேந்தலை யார் நடத்துவது என்பதில் நடந்த குடுமிப்பிடி சண்டையை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
திலீபனின் நினைவுநாள் ஆரம்பத்தில் நடந்த குழப்ப வீடியோவை கவனித்தால் நானும் இயக்கம்தான் என ஒரு தம்பி சொல்லுவார். இப்போது கணிசமான தம்பிகள் மட்டுமல்ல, ஐயாக்களும் நானும் இயக்கம்தான் என்றபடிதான் திரிகிறார்கள்.
ஒரு காலத்தில் இயக்கம் என்பதை பகிரங்கமாக சொல்ல முடியாத காலம் இருந்தது. “நான் சாதாரண பொதுமகன், கூலித் தொழிலாளி“ என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, விடுதலைப் போராளிகளாக செயற்பட்ட வரலாறுகளை கொண்ட சமூகம் இது.
இப்போது எந்த செயற்பாட்டையும் செய்யாமல், நானும் இயக்கம்தான், இயக்கம் என்னை கௌரவித்தது
அண்மையில் நடந்த சம்பவமொன்றும் இதனுடன் பொருந்திப் போவதால், அதையும் சொல்லிவிட வேண்டும்.
வல்வெட்டி நகரசபைக்குட்பட்ட தீருவிலில் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரண்டு மாவீரர்களின் நினைவுத்தூபி மிக உயரமாக விடுதலைப்புலிகளின் காலத்தில் கட்டப்பட்டிருந்தது.
பின்னர் இராணுவம் அதை உடைத்திருந்தது.
அண்மையில் உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையுடன்- வல்வெட்டித்துறை நகரசபை பதவியேற்றதும்- ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு காரியம் செய்தார்.
தீருவில் பன்னிரண்டு போராளிகளின் நினைவிடத்திற்கு அருகில், பொது நினைவுத்தூபி ஒன்றை அமைப்போம் என அவரது ரெலோ மூளை வேலை செய்தது.
“புலேந்திரன், குமரப்பாவின் நினைவிடம் இருக்கட்டும், எல்லா இயக்கத்திலிருந்தும் மரணமானவர்களிற்காக இந்த நினைவிடத்தை அமைப்போம்“ என முடிவெடுத்தார்.
வல்வெட்டித்துறை நகரசபையிலுள்ள எல்லா உறுப்பினர்களையும் அழைத்து கதைத்து, எதிர்க்கட்சிகளிற்கு கடிதம் அனுப்பி, பொது நினைவுத்தூபிக்காக முழு மூச்சாக செயற்பட்டார்.
விசயம் வெளியில் வந்து, புலிகளின் நினைவிடத்திற்கு அருகில் பொது நினைவிடம் என சமூக ஊடகங்கள் கதறின.
விசயம் முன்னணியின் காதிற்கும் சென்றது. சும்மா இருக்குமா முன்னணி? சும்மாவே காட்டு காட்டென காட்டுவார்கள்.
விடுதலைப்புலிகளின் நினைவிடத்திற்கே பிரச்சனை, புலிகளை கையிலெடுக்க பக்கா சந்தர்ப்பம் என்றால் பேசாமல் இருப்பார்களா?
இருக்கவில்லை. உடனே பரபரப்பானார்கள். ஓவர் த போனில் எல்லாம் நடந்தன. வல்வெட்டித்துறை நகரசபையிலுள்ள சிவாஜிலிங்கம் எதிர்ப்பணிக்கு, முன்னணியின் அமைப்பாளர் மணிவண்ணன் நேரடியாக தொலைபேசியில் அழைத்தும் பேசினார்.
வேறு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். “ஆந்திராவிற்கு போகிறோம், ரெட்டியை தூக்குகிறோம்“ பாணியில் பிளான் பண்ணினார்கள்.
யாழிலிருந்து முன்னணியினர் வருவார்கள், வல்வெட்டித்துறையில் கொஞ்சம் இளைஞர்களை திரட்டி வாருங்கள், சும்மா அதிர வைத்து விடுவோம் என்று திட்டத்தை விளங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
“இது கொஞ்சம் சிக்கலான விசயம்.
அதனால் ஊரிலிருந்து இளைஞர்களை திரட்ட முடியாது. அவர்களில் ஏதும் வழக்கானால், நாம் பிறகு பெற்றோரின் முன்னால் முகம் கொடுக்க முடியாது. நாம் மட்டும் வருகிறோம். எப்போது போராட்டம் என்பதை திட்டமிட்டுவிட்டு சொல்லுங்கள்“ என்று சொல்லியிருக்கிறார்கள்.
“இப்படியும் சிக்கலுண்டா?… சரி, நாங்கள் பின்னர் தொடர்பு கொள்கிறோம்“ என முன்னணி தலைவர்கள் தொலைபேசியை வைத்ததுதான்.
இரண்டு மாதமாகி விட்டது, அதன்பின் வல்வெட்டித்துறை பக்கமே தொலைபேசியை எடுக்கவில்லை!
0 comments:
Post a Comment