2000ஆம் ஆண்டு யாழ். குடாநாடு இராணுவ முற்றுகைக்குள் இருந்த காலம். இடப்பெயர்வு, இராணுவ நெருக்கடி என மக்கள் இன்னல்களை அனுபவித்து வந்த காலம்.
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈ.பி.டி.பி யாழ். தீவகப்பகுதியிலும் யாழ். குடாநாட்டிலும் ஆயுதபலத்துடன் செய்த மோசடிகளை சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பாளர் என்ற ரீதியிலும் ஊடகவியலாளர் என்ற ரீதியிலும் நிமலராசன் ஆதரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்.
வாக்களிப்பு நிலையங்களில் நடந்த மோசடிகள் பற்றியும் வாக்களிப்பு நிலையங்களில் ஏனைய கட்சி முகவர்களை அச்சுறுத்தி கலைத்து விட்டு ஈ.பி.டி.பியினர் செய்த தேர்தல் மோசடிகள் பற்றியும் நிமலராசன் அம்பலப்படுத்தியிருந்தார்.
தேர்தல் முடிந்து 9ஆவது நாள் ஒக்டோபர் 19ஆம் திகதி சந்திரிக்கா அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது. அந்த அமைச்சரவையில் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்டதும் தான் யாழ்ப்பாண மக்களுக்கு விடுதலை பெற்று தரப்போவதாகவும் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் அவர் அறிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா பதவி ஏற்றுக்கொண்டதும் அன்றிரவே தனது அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்தார். விடுதலையை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
ஓக்டோபர் 19ஆம் திகதி இரவு 10மணியளவில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனது வீட்டில் இருந்த போது ஈ.பி.டி.பி ஆயுதகுழுவால் நிமலராசன் சுட்டுக்கொல்லப்பட்டார். தனது அறையில் செய்தி ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் போது மிக நெருக்கமாக வந்து அவரின் நெஞ்சை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததுடன் கிரனட் தாக்குதல்களையும் நடத்தினர்.
இதில் நிமலராசன் கொல்லப்பட்டதுடன் அவரின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம், நிமலராசனின் சகோதரியின் மகன் 11வயதான ஜெயதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
நிமலராசனின் வீடு இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தது. நிமலராசனின் வீட்டிற்கு முன்னால் இராணுவ சாவடி ஒன்றும் இருந்தது. இத்தகைய இராணுவ பாதுகாப்பு நிறைந்த இடத்திலேயே இக்கொலை நடந்தது. இராணுவத்தினரின் அனுசரணை இல்லாமல் ஆயுதத்துடன் அங்கு யாரும் நுழைந்து விட முடியாது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுவே இக்கொலையை செய்ததாக தமிழ்நெற் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நிமலராசன் பிபிசி தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு யாழ்ப்பாண செய்தியாளராக பணியாற்றியதுடன் தமிழ்நெற் இணையத்தளம் மற்றும் வீரகேசரி, ராவய ஆகிய பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக பணியாற்றினார்.
நிமலராசன் சுட்டுக்கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிறு வீரசேகரி வார இதழிலும் ராவய வாரப்பத்திரிகையிலும் நடந்த முடிந்த பொதுத் தேர்தல் பற்றியும் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் மோசடி பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். தீவுப்பகுதியில் ஈ.பி.டி.பி எவ்வாறு வாக்கு மோசடியை செய்தது என்பதை விரிவாக எழுதியிருந்தார். அத்தேர்தலில் ஈ.பி.டி.பி யாழ். மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களை பெற்றிருந்தது.
சந்திரிக்கா அரசாங்கத்தில் முதல் தடவையாக அமைச்சராக பதவி ஏற்றதும் டக்ளஸ் தேவானந்தா தனது அபிவிருத்தி வேலைகளை நிமராசன் படுகொலை மூலம் அன்றிரவே ஆரம்பித்தார்.
நிமலராசன் படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினரான நெப்போலியன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நெப்போலியன் இலங்கையிலிருந்து தப்பி லண்டனுக்கு சென்ற நிலையில் அவ்வழக்கும் மூடப்பட்டு விட்டது.
நிமலராசன் படுகொலை உட்பட பல படுகொலைகளை செய்ததாக நம்பப்படும் ஈ.பி.டி.பி உறுப்பினர் நெப்போலியன் லண்டனில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு லண்டனில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
தனது ஊடகவியலாளர் ஒருவரை படுகொலை செய்த கொலையாளிக்கு பிரித்தானிய அரசு அடைக்கலம் வழங்கியிருப்பதை கண்டு பி.பி.சி நிறுவனமும் மௌனம் காத்துக் கொண்டது.
நிமலராசன் 1988ஆம் ஆண்டு பகுதியில் முரசொலி பத்திரிகையில் நான் வேலை செய்தகாலத்தில் விளம்பர பகுதியில் சுறுசுறுப்பான இளைஞனாக நிமலராசன் எமக்கு அறிமுகமாகிறான்.
அவரது தந்தை மயில்வாகனம் 1983ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து முரசொலி பத்திரிகையின் அச்சகப்பகுதி முகாமையாளராக பணியாற்றினார்.
விளம்பர விடயமாக யாழ். குடாநாட்டின் பல பாகங்களுக்கும் செல்லும் நிமலராசன், தனது பணிகளுக்கு அப்பால் ஆங்காங்கே கிடைக்கும் செய்திகளையும், மக்கள் சொல்லும் தகவல்களையும் சிறு துண்டுகளில் குறித்துக்கொண்டு வருவான். தன்னுடைய கடமை முடிந்த பின் நிமலராசன் தனது அதிகமான நேரத்தை எம்முடன் ஆசிரிய பீடத்திலேயே கழிப்பான். நிமலராசன் குறித்து வரும் சிறுசிறு குறிப்புக்களில் சிலவேளைகளில் தலைப்பு செய்தியாக இருக்கும்.
ஆசிரிய பீடத்திற்கு ஏனைய பிரிவுகளை சேர்ந்தவர்களும், வெளியாரும் வருவது இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தாலும் நிமலராசனுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அவன் எல்லோரையும் அண்ணே என்று அழைத்து கட்டிப்போட்டிருந்தான். தினசரி நிமலராசன் கொண்டுவரும் செய்தி முன் பக்க செய்தியாக இருக்கும். செய்திப்பிரிவில் பணியாற்றாத போதும் அவன் செய்தித்துறையில் காட்டிய ஆர்வமே பிற்காலத்தில் அவனை ஒரு சிறந்த துணிச்சல் மிக்க பத்திரிகையாளனாக்கியது.
1990க்கு பின் முரசொலி மூடப்பட்டதை தொடர்ந்து நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாக பிரிந்து போனோம். பாரதி, ரட்னதுரை, ரூபன் என அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போதும் நிமலராசன் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தான். நிமலராசனின் செய்தித்துறை ஆர்வம் 1990ஆம் ஆண்டுகளின் பின்
செய்தியாளனாக அவனை தரிசிக்க முடிந்தது.
நெருக்கடியான அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ராவய, பிபிசி, வீரகேசரி என பல ஊடகங்களுக்கு பணியாற்றினான். 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்நெற் ஆரம்பிக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்திற்கான பிரதம செய்தியாளராக நிமலராசன் நியமிக்கப்பட்டார். அக்காலப்பகுதியிலிருந்து தமிழ்நெற்றில் பணியாற்றிய எனக்கும் நிமலராசனுக்கும் இடையிலான தொடர்பு மீண்டும் நெருக்கமானது. யாழ்ப்பாணத்தில் கணனி வசதி இல்லாத அக்காலப்பகுதியில் நடுநிசியில் கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை சொல்லி அண்ணை உடனடியாக இதை மெயிலில் போட்டுவிடுங்கோ என அன்புக்கட்டளை இடுவான். நேரகாலம் பாராது பணியாற்றும் துடிப்பு நிமலராசனைப்போல் வேறுயாரையும் நான் காணவில்லை.
1990களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மூடிய சிறைச்சாலை ஆன போது 1996களுக்கு பின் இராணுவ நெருக்கடி சிறைக்குள் அகப்பட்ட போது அங்கிருந்து வெளி உலகிற்கு தகவலை சொன்ன ஒரேஒரு மனிதனாக நிமலராசன் உயர்ந்து நின்றான். அவனது சிங்கள மொழி ஆளுமை, துணிச்சல், அவனை மிகக்குறுகிய காலத்தில் திறமையும் அனுபவமும் மிக்க செய்தியாளனாக உயர்த்தியது.
0 comments:
Post a Comment