அண்மையில் உயர் அதிகாரி பக்கச்சார்பாக செயற்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.
தெம்புவன பிரதேசத்தில் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான லொறியில் சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிவித்து, அந்த மணல் லொறியை பொலிஸ் உத்தியோகத்தர் கைப்பற்றி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தார்.
எனினும், உயர் அதிகாரி குறித்த லொறியை விடுவித்திருந்தார். இதனால் மனம் உடைந்து போன பொலிஸ் உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருந்தார்.
இதனால் பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸார் காப்பாற்றியிருந்தனர்.
கடமை நேரத்தில் உத்தியோகபூர்வ துப்பாக்கியை தவறாக பயன்படுத்தியமைக்காக இந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது குடும்பத்துடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார்.
இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்ட ஜனாதிபதி பத்து லட்சம் ரூபா பணத்தை உதவியாக வழங்கியுள்ளார்.
இதேவேளை, குறித்த மணல் லொறி உரிய ஆவணங்களுடன் மணலை போக்குவரத்து செய்தது என அண்மையில் பிரதி அமைச்சர் நலின் பண்டார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
0 comments:
Post a Comment