யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடைய மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுப்பிட்டி, இமையாணன் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தரே இதில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி அதிகாலை இந்த கொலை நடந்தது.
வெளிமாவட்டத்தில் இருந்து வாகனம் ஒன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டு , அவருக்கு விநியோகம் செய்த பின்னர் வாகனம் திரும்பி சென்றதாகவும், அதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்த போது, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் மனைவி தெரிவித்திருந்தார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த போது, தன்னை வாள் முனையில் அச்சுறுத்தி அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு கும்பல் தப்பி சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
வாள் வெட்டில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
அந்நிலையில், குடும்பஸ்தரின் கொலையை, நகைக்கான கொலையாக மாற்றவே நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்த நிலையில், கொலையானவரின் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதலினால் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
கொல்லப்பட்டவர் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது மனைவியுடன் கள்ளக்காதலன் வந்து தங்கியிருந்ததும், அப்போது எதிர்பாராத விதமாக கணவன் வந்ததால், கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, மனைவியும், கள்ளக்காதலனும் இணைந்து, கணவனை வாளால் வெட்டிக் கொன்றுள்ளனர்.
பின்னர், மேற்படி சோடிக்கப்பட்ட கதையை கூறி நாடகம் ஆடியுள்ளனர்.
கைதான கள்ளக்காதலன், முன்னர் தொலைபேசி விற்பனை நிலையம் நடத்தியவர். இந்தக்காலத்தில், அவருக்கும், கொல்லப்பட்டவரின் மனைவிக்குமிடையில் அறிமுகம் ஏற்பட்டு நெருக்கமாகியுள்ளது விசரணையில் தெரிய வந்துள்ளது.
கைதான மனைவியும், கள்ளக்காதலனும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment