யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில், நீண்டகாலமாக பிரச்சினை நிலவியுள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, அயலில் வசித்த அவரது அண்ணன் ஓடிச் சென்றுள்ளார். அங்கு, அவரது தங்கை தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டார்.
அவர் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண்ணே எரிகாயங்களுக்கு உள்ளானார்.
அவரை அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து எரித்ததாக அவரது அண்ணன் பொலிசாரிடம் தெரிவித்தார்.
தங்கையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு ஓடிச் சென்ற போது, தனது கணவனே தன்னை எரித்ததாக தங்கை தெரிவித்திருந்ததாக அவர் பொலிசாரிடம் கூறியிருந்தார்.
இதனால் கோபமடைநத மனைவியின் அண்ணன், கணவனை கடுமையாக தாக்கியுள்ளார். கணவனின் உடலில் பல பாகங்களில் எலும்பு உடைவு காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண்ணிடம் அச்சுவேலி பொலிசார் தகவல் பெற முனைந்த போது, தனக்குத்தானே தீமூட்டியதாக அந்த பெண் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதால், அவரிடம் முழுமையான தகவலை இதுவரை பெறவில்லையென அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்
0 comments:
Post a Comment